எடப்பாடி பழனிசாமி 
மாநிலம்

ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 5 பெண்கள்... தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் பலே வியூகம்!

காமதேனு

ஒவ்வொரு தேர்தல் பூத் கமிட்டியிலும் 5 பெண்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட கட்சி என்றால் அது அதிமுக தான் என கூறி விட முடியும். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், பெண்களின் அபிமானத்தை பெருமளவில் பெற்ற எம்ஜிஆரையும் காரணமாக கூற முடியும். அந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று வரை அசைக்க முடியாததாக இருக்கிறது என்பதே, அக்கட்சியின் பலமாகவும் உள்ளது.

பா.வளர்மதி

அதிமுக மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுக மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மகளிர் அணி நிர்வாகிகளிடம் பேசிய வளர்மதி, “1973 ல் நாங்கள் வீடுவீடாக சென்று அதிமுகவில் உறுப்பினர்களைச் சேர்த்தோம். அப்போது பெண்கள் எங்களைக் கேவலமாகப் பேசுவார்கள். அப்போது 50 பைசா உறுப்பினர் படிவம். வட சென்னையில் எங்களைத் துரத்தித் துரத்தி அடித்தார்கள். அப்போது 5 பெண் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கே சிரமப்பட்டோம்.

அதிமுக மகளிர் அணி கூட்டம்

ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் பெண்கள் தானாகவே அதிமுகவைத் தேடி வந்தார்கள். எடப்பாடி பழனிசாமி காலத்திலும் பெண்கள் தானாகவே வந்து சேர்கின்றனர். பெண்களைச் சென்று சந்திப்பது எளிதாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், வரும் மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் அமைக்கப்படும் பூத் கமிட்டியில் 5 பெண்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரது முகவரியும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும். அதனால், அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். 40 தொகுதியிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்” என வளர்மதி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT