மாநிலம்

`புகார் அளித்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை'- சென்னை காவல் ஆணையர்

ரஜினி

"பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டால் அது குற்றமாகும். புகார் வந்தால் சட்ட ஆலோசனை பெறப்பட்டு அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என சென்னை காவல் ஆணையர் கூறினார்.

சென்னையில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டி விபத்துகள் ஏற்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் தோழன் அமைப்பினர் இணைந்து பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஒரு வாரத்தில் 100 பள்ளிகளை தேர்வு செய்து விழிப்புணர்வு முகாம் நடத்தவுள்ளதாகவும் முதற்கட்டமாக இன்று சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள எம்.சி.சி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் கபில் சரட்கர், மற்றும் தோழன் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனை தொடர்ந்து விபத்து நடந்தவுடன் செய்யவேண்டிய முதலுதவிகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு தோழன் அமைப்பினர் செய்து காட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று முதல் 100 பள்ளிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இதில் 25,000 மாணவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சாலை பாதுகாப்பு தொடர்பாக வாரத்தில் 5 நாட்கள் ஸ்பெஷல் டிரைவ் மேற்கொண்டு வருகிறேன். நம்பர் பிளேட், புட் போர்டு, ஒரு வழிப்பாதை, மாணவர்கள் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலை விதிமீறல்களில் ஈடுபட்டவருக்கு அபராத செலான் வழங்கி வருகிறோம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டி ஒருவர் 96 அபராத ரசீதுகளை இரண்டு நாட்களில் செலுத்தி இருக்கின்றனர். பேருந்து, ரயில்களில் அராஜகத்தில் ஈடுபட்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா வேட்டை ஆபரேஷனில் காவலர்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டாலும் சட்டப்படி எடுக்கப்படும். நேற்று இதேபோல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் விற்பவர்கள் குறித்த தகவல் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும். ரகசியம் கசிந்தால் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 350க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்களை வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டினால் அவர்களது வாகன பதிவு ரத்து செய்யப்படும். வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி மாணவர் பலியான விவகாரத்தில் ஏற்கெனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த தவறும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆடியோ குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்டால் அது குற்றமாகும். புகார் வந்தால் சட்ட ஆலோசனை பெறப்பட்டு அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT