நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தம் 
மாநிலம்

3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

கே.காமராஜ்

வங்கக்கடலில் வீசி வரும் கடும் சூறைக்காற்று காரணமாக, தூத்துக்குடியில் 3,000க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி துவங்கி தற்போது வரை கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடந்த 17ம் தேதி முதல் வருகிற 22ம் தேதி வரை வங்கக் கடலில் கடுமையான சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த 17ம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மேலும் மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைக்குமாறு மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் முதல் தருவைகுளம், காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம், பெரியதாழை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இன்று 4வது நாளாக படகுகளை மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுமார் 20,000 மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருப்பதால், 20 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழப்பு

மேலும் சில நாட்களுக்கு மலை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் மீனவர்கள் தொடர் வேலை இழப்பை சந்திக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT