விளையாட்டு

முட்டி மோதிய ஆப்கானிஸ்தான் - பதிலடி கொடுத்த இலங்கை!

காமதேனு

ஆசியக் கோப்பை டி20 தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இலங்கை அணி.

நேற்று சார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி ஆப்கானிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்கள். 13 ரன்கள் எடுத்த தில்ஷன் மதுஷனகே அவுட் ஆனாலும், மறுமுனையில் ஆடிய ரமனுல்லா குர்பாஸ் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறவிட்டார். அவர் 22 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்து, 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ராகிம் ஜட்ரனும் 40 ரன்கள் விளாசினார். ஆனாலும் மறுமுனையில் அடுத்தடுத்தாக விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தன. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடினார்கள். குசல் மெண்டிஸ் 36 ரன்னிலும், புதும் நிஷாங்கா 35 ரன்னிலும், குணதிலகா 33 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் அனைவரும் சிறப்பாகவே விளையாடினார்கள். 6 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பானுகா ராஜபக்ச 14 பந்துகளில் 31 ரன்கள் அடித்து தெறிக்கவிட்டார். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. இலங்கை வெற்றி பெற்றாலும் கூட, ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய ரமனுல்லா குர்பாஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆசியக் கோப்பையின் லீக் சுற்று ஆட்டத்தின் போது இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

SCROLL FOR NEXT