விளையாட்டு

சாம்பியன் அணிகளை வென்ற குட்டிநாடுகள்: உலகக்கோப்பையில் நடந்த ஆச்சர்ய போட்டிகள்!

வீரமணி சுந்தரசோழன்

ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பல முன்னாள் சாம்பியனான அணிகளை, குட்டி அணிகள் வீழ்த்திய ஆச்சர்யங்கள் நடந்துள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பையில் சாம்பியன்களை வீழ்த்தி, குட்டி நாடுகள் அதிர்ச்சியளித்த போட்டிகளின் விவரம்...

நமீபியாவின் நெத்தியடி: உலகக்கோப்பையின் தொடக்கத்தில் முதல் லீக் போட்டியிலேயே நமீபியா அணி இலங்கையை அபாரமாக வீழ்த்தியது. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த நமீபியா 163 ரன்கள் எடுத்தது, ஆனால் அடுத்ததாக களமிறங்கிய இலங்கை 108 ரன்களில் சுருண்டது.

ஷாக்கடித்த ஸ்காட்லாந்து: லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 160 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் ஜார்ஜ் மன்சே 66 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் 118 ரன்களில் சுருண்டது.

அதிர்ச்சியளித்த அயர்லாந்து: அதேபோல மற்றொரு லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை அயர்லாந்து வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய அயர்லாந்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்தது. அயர்லாந்தின் ஸ்டிர்லிங் 66 ரன்களும், டக்கர் 45 ரன்களும், பாலிபிர்னீ 37 ரன்களும் எடுத்தனர். இத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது.

அயர்லாந்தின் அடுத்த ஷாக்: சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து அணியை அயர்லாந்து அபாரமாக வீழ்த்தியது. முதலில் பேட் செய்த அயர்லாந்து 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பால்பிர்னீ 62 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய இங்கிலாந்து 105 ரன்களில் சுருண்டது.

பாகிஸ்தானுக்கு பங்கம்: மற்றொரு சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் தற்போது அரையிறுதில் ஆட இருக்கும் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 130 ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்து ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களில் சுருண்டது. ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நெதர்லாந்தின் நச் சம்பவம்: அரையிறுதிக்கான வாய்ப்பில் இருந்த தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதுதான் இந்த உலகக்கோப்பையின் சிறப்பான சம்பவம். முதலில் பேட் செய்த நெதர்லாந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அக்கர்மான் 41 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணியின் க்ளோவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

SCROLL FOR NEXT