கோப்பையை வென்ற புனே அணி 
விளையாட்டு

புரோ கபடியில் புணே அணி சாம்பியன்... போராடி வீழ்ந்தது ஹரியாணா!

காமதேனு

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில்  ஹரியாணாவை வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது புணே அணி.

வெற்றி களிப்பில் புணே அணி

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  நடந்து வந்தது. மொத்தம் 12 அணிகள் மோதின. அவற்றுள் புணே அணியும், ஹரியாணா  அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில்  புணே, ஹரியாணா அணிகள் மோதின. இத்தொடரில் கடைசியாக பங்கேற்ற 11 போட்டியிலும் வெற்றி பெற்று அதிக தன்னம்பிக்கையுடன்  புணே வீரர்கள் களமிறங்கினர்.

போட்டியின் முதல் புள்ளியை புணே அணியே பெற்றது. அடுத்த புள்ளியை ஹரியாணா அணி பெற்றது. ஆனாலும்  போட்டியின் முதல் 10 நிமிடத்தில் புணே அணி  4-3 என முந்தியது. அடுத்த சில நிமிடங்களில், இரு தரப்பிலும் ரெய்டு சென்ற வீரர்கள் பிடிபட, விறுவிறுப்பு அதிகரித்தது. போட்டியின் 17 வது நிமிடத்தில் ரெய்டு சென்ற புனே வீரர் பங்கஜ், 4 பேரை அவுட்டாக்கியதால், அது  'சூப்பர் ரெய்டாக' அமைந்தது. முதல் பாதி முடிவில் புணே அணி 13-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி துவங்கியதும் ஹரியாணா அணி, முதன் முறையாக ஆல் அவுட்டாக, புணே (21-15) பக்கம் வெற்றி திரும்பியது. கடைசி 5 நிமிடம் இருந்தபோது, ஹரியாணா அணி 17 புள்ளிகளை பெற்றிருந்ததால் 25 புள்ளிகளை பெற்றிருந்த  புணேயை நெருங்கப் போராடியது. கடைசி 1 நிமிடம் இருந்த போது, ஹரியாணாவின் சித்தார்த் 2 புள்ளி எடுத்த போதும்கூட  அது அவர்களின் வெற்றிக்குப் போதவில்லை. 

ஆட்டத்தின் முடிவில் புணே அணி 28-25 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. புரோ கபடி அரங்கில் முதன் முறையாக சாம்பியனாது.  கோப்பை வென்ற புணே அணிக்கு ரூ. 3 கோடி பரிசு தரப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த  ஹரியாணாவுக்கு ரூ. 1.8 கோடி கிடைத்தது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் தமிழ் தலைவாஸ் அணிக்கு  9 வது இடம்தான் கிடைத்தது. அந்த அணி 22 போட்டிகளில் விளையாடி  9 வெற்றியும், 13 தோல்வியும் பெற்று, 51 புள்ளிகளுடன் பாதியிலேயே  வெளியேறியது.

SCROLL FOR NEXT