மார்க் தர்மாய் 
விளையாட்டு

சாதனைக்கு உயரம் ஒரு தடையில்லை... உலக உயரம் குறைந்தோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ’மார்க் தர்மாய்’!

காமதேனு

ஜெர்மனியில் நடைபெற்ற உயரம் குறைந்தோருக்கான உலகளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியராக சாதனை படைத்திருக்கிறார் மார்க் தர்மாய்.

22 நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற, உலகளவிலான உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்களில் மும்பையின் பாந்த்ராவை சேர்ந்த பாராலிம்பிக் தடகள வீரர் மார்க் தர்மாய் என்பவரும் அடங்குவார்.

போசியா விளையாட்டின் இரட்டையர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடிய மார்க் தர்மாய் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இதன் மூலம் இவர் உயரம் குறைந்தோருக்கான உலகளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றிருக்கிறார்.

மார்க் தர்மாய்

ஜெர்மனியில் நடைபெற்ற இதே போட்டியின் வெவ்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு மேலும் 4 பதக்கங்களை வென்றிருக்கிறார் மார்க் தர்மாய். வட்டு எறிதல், இரட்டையர் பூப்பந்து ஆகியவற்றில் வெள்ளியும், ஈட்டி எறிதல் மற்றும் பூப்பந்து ஆட்டத்தில் வெண்கலமும் வென்றிருக்கிறார்.

முன்னதாக சர்வதேச பாராலிம்பிக் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றும், தங்கம் வெள்ளி பதக்கங்களை மார்க் தய்மாய் பலமுறை வென்றுள்ளார். உத்வேகமூட்டும் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் இவர் விளங்கி வருகிறார்.

ஜெர்மனி சாதனை விவரம் வெளியானதில் இந்தியா நெடுக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாந்த்ராவை சேர்ந்த ஜிம்கானா மையம் மார்க் தர்மாய்க்கு வாழ்நாள் உறுப்பினர் பதவியை வழங்கி சிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT