விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: ருத்ரதாண்டவம் ஆடிய அயர்லாந்து - ஸ்காட்லாந்து அணி அதிர்ச்சி தோல்வி

காமதேனு

உலகக்கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை அயர்லாந்து அணி அபாரமாக வீழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய லீக் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. முதல் லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்த உற்சாகத்துடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரன் மன்சே 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மறுபுறம் மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மேத்யூ க்ராஸ் மற்றும் பெரிங்டன் ஆகியோரும் ஓரளவு பொறுப்பாக ஆடினார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஜோன்ஸ் 55 பந்துகளில் 86 ரன்களையும், பெரிங்டன் 37 ரன்களையும், க்ராஸ் 28 ரன்களையும் எடுத்தனர்.

177 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஸ்டிர்லிங் 8 ரன்னிலும், பால்பிர்னீ 14 ரன்னிலும், டக்கர் 20 ரன்னிலும், டெக்டர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கர்டிஸ் காம்பர் மற்றும் டாக்ரெல் ஆகியோர் கைகோர்த்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.

காம்பர் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்தார். டாக்ரெல் 39 ரன்கள் குவித்தார். கடைசி 5 ஓவர்களில் இவர்கள் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுக்கவைத்தனர். இதனால் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 விக்கெட்டுகள் மற்றும் ஆட்டமிழக்காமல் 72 ரன்களை குவித்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT