விளையாட்டு

பீல்டிங்கில் படு சொதப்பல்: தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம்?

காமதேனு

நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் 9 ரன்னிலும், ரோகித் சர்மா 15 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். தொடர்ந்து கோலி 12 ரன்னிலும், ஹூடா ரன் ஏதும் எடுக்காமலும், பாண்ட்யா 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் , அஸ்வின் 7 ரன்னிலும், ஷமி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக ஆடி 40 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் லுங்கி கிடி 4 விக்கெட்களையும், பர்னெல் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்.

134 ரன்கள் என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீ காக் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரூசோவும் டக் அவுட்டானார். பின்னர் பவுமாவும் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மார்க்ரெம் மற்றும் மில்லர் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்து தென்னாப்பிரிக்க அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதன் காரணமாக அந்த அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய லுங்கி கிடி ஆட்டநாயகனாக தேர்வானார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமாரைத் தவிர எந்த பேட்ஸ்மேனும் நன்றாக ஆடவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் மிக குறைவாக இருந்தது. ஆனாலும் 134 எனும் எளிய இலக்கை தொட விடாமல் தென்னாப்பிரிக்காவை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். குறிப்பாக அர்ஷ்தீப் சிங், புவனேஷ்குமார், ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், அஸ்வின் இஷ்டத்துக்கு ரன்களை அள்ளிக்கொடுத்தார் அவர் 4 ஓவரில் 43 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்திய அணியின் நேற்றைய தோல்விக்கு மிக முக்கிய காரணம் மோசமான பீல்டிங்தான். நேற்றைய ஆட்டத்தின் போக்கை மாற்றிய மார்க்ரெம் 30 ரன்னுக்குள்ளாகவே அவுட்டாக வேண்டியது. அவரின் இரண்டு எளிய ரன் அவுட் வாய்ப்பை ரோகித் சர்மா தவறவிட்டார். மார்க்ரெம் 36 ரன்னில் இருந்தபோது அஸ்வின் பந்தில் எளிமையான கேட்ச் கொடுத்தார், அதனை கோலி தவறவிட்டார். மார்க்ரெம் விக்கெட்டை தொடக்கத்திலேயே எடுத்திருந்தால் இந்திய அணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கும். இன்னும் சில மோசமான பீல்டிங்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு ரன்களை கொடுத்தது. இனிவரும் போட்டிகளில் பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் இந்தியா ஜொலிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT