விளையாட்டு

பாகிஸ்தான் உலகக்கோப்பையை வென்றால் கேப்டன் பாபர் அசாம் பிரதமராவார்: சுனில் கவாஸ்கர்

காமதேனு

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 2048ல் பாபர் அசாம் நாட்டின் பிரதமராக வருவார் என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992 ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பைக்கும் இப்போதைய உலகக்கோப்பைக்கும் இடையே விசித்திரமான ஒற்றுமை உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இரண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்து பல மீம்ஸ்கள் மற்றும் நகைச்சுவைகள் இணையத்தில் வலம் வருகின்றன.

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டிக்கு முன்பு கவாஸ்கர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகின்றன. அதில் அவர், “இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 2048-ல் பாபர் அசாம் அந்நாட்டின் பிரதமராக வருவார்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

1992 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, கேப்டன் பாபர் அசாமிடம் 1992 போட்டியுடன் உள்ள ஒற்றுமை குறித்து கேட்கப்பட்டது. அதுபற்றி பதிலளித்த அவர், "நிச்சயமாக, இரண்டு போட்டிகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன, நாங்கள் கோப்பையை வெல்ல முயற்சிப்போம், இந்த அணியை குறிப்பாக இந்த பெரிய மைதானத்தில் வழிநடத்துவது எனக்கு ஒரு பெரிய கௌரவம், நாங்கள் எங்கள் 100 சதவீதத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சிப்போம்" என்று கூறினார்.

1992 மற்றும் 2022 உலகக் கோப்பைகள் இரண்டிலும், பாகிஸ்தான் மெல்போர்ன் மைதானத்தில் தோல்வியுடன் தனது பயணத்தை தொடங்கியது. இரண்டு போட்டிகளிலும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. முக்கியமாக இரண்டு போட்டிகளிலும், கடைசி நாளில் பாகிஸ்தான் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அரையிறுதிக்குள் நுழைந்தது.

SCROLL FOR NEXT