விளையாட்டு

‘ஹர்திக் பாண்ட்யா இனிவரும் போட்டிகளில் கேம் சேஞ்சராக இருப்பார்' - உத்தரவாதம் தரும் கவாஸ்கர்

காமதேனு

டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமல்ல, ஒவ்வொரு டி20 போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு 'கேம் சேஞ்சராக' இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கவாஸ்கர், "உலகக் கோப்பை டி20 தொடரில் மட்டுமல்ல, இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா ஆட்டத்தை மாற்றும் நாயகனாக இருப்பார். அவர் 5-வது இடத்தில் பேட் செய்தாலும் வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும், அவர் அடிக்கடி இந்தியாவுக்கான கேம் சேஞ்சராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் முதலாவதாகவோ அல்லது கடைசியாகவோ பந்து வீச வந்தாலும் ஜொலிப்பார். சில சமயங்களில் நான் அவரைப் புதிய பந்தில் பார்க்க விரும்புவேன்" என்று கூறினார்.

மேலும், ஹர்திக்கின் ஆல்-ரவுண்ட் பேக்கேஜ் இந்திய அணிக்கு முக்கியத் தேவையாகும். அவரை முழு அளவிலான ஆல்-ரவுண்டராக வைத்திருப்பது இந்திய அணியின் சமநிலைக்கு முக்கியமானது என்றும் கவாஸ்கர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் மூன்றரை மாதங்கள் உள்ளன, அக்டோபரில் நடக்கும் இந்தத் தொடரின் இறுதி 15 அணிகளுக்குள் இணைய இந்தியா இன்னும் பல போட்டிகளை விளையாட உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் 2022-ல் ஆல்ரவுண்டராகவும், கேப்டனாகவும் சிறப்பாக சீஸனை முடித்து குஜராத் அணிக்குக் கோப்பையைப் பெற்றுத்தந்த ஹர்திக் பாண்ட்யா மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஹர்திக்கின் அபாரமான ஆல்ரவுண்ட் திறன் நிச்சயமாகக் கைகொடுக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT