பாகிஸ்தான் அணி வீரர்கள் 
விளையாட்டு

அகமதாபாத் சம்பவத்துக்கு பதிலடி... சென்னையில் நெகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்!

காமதேனு

சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளின் மோதலின் போது பாகிஸ்தான் வீரர்கள் அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நேற்று சென்னையில் நடந்த போட்டியில் தக்க பரிகாரம் செய்திருக்கிறார்கள் சென்னை ரசிகர்கள்.

கடந்த வாரம் நடந்த இந்தியா பாகிஸ்தான் மேட்சில் முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த  ஆட்டத்தில், டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசத் தொடங்கிய போதே, அவரை பேச விடாமல் முழக்கம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்து சத்தம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்ய விடாமல் தொந்தரவு செய்தனர். 

இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்து விட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். இதற்கு பதிலடியாகவும், பரிகாரமாகவும் சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை கொண்டாடினர்.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மேட்ச் நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. சென்னையில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்து வந்து அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வந்தபோது சென்னை ரசிகர்கள் அதை தீவிரமாக கொண்டாடினார்கள். முக்கியமாக பாபர் ஆஸம் ஆட வந்தபோது, பாபர் பாபர் என்று கூறி அவரை வரவேற்று கொண்டாடினார்கள். 

இந்த வரவேற்பும், ஆதரவும் பாகிஸ்தான் வீரர்களையும் பாகிஸ்தான் அணி ரசிகர்களையும் மிகவும் நெகிழ செய்தது. தென்னிந்தியா அதிலும் குறிப்பாக சென்னை காட்டும் பண்பாடும் அன்பும் எங்களை தென்னிந்தியாவை மிகவும் நேசிக்க வைக்கிறது என்று பாகிஸ்தானியர்கள் கூறுகிறார்கள். 

அகமதாபாத் சம்பவத்தை நினைவு கூறும் சென்னை ரசிகர்கள், "இந்தியாவா பாகிஸ்தானா என்றால் இந்தியாவைத்தான் ஆதரிக்க வேண்டும். அதற்காக பாகிஸ்தானை இப்படி அவமதிக்க கூடாது. அவர்கள் நம் நாட்டிற்கு வந்த விருந்தாளிகள். அவர்களை நாம் சரியாக நடத்த வேண்டும்.

நம்முடைய நாட்டிற்கு வந்த மக்களை, இப்படி வேண்டுமென்று அவமதித்து கிண்டல் செய்ய கூடாது. அது மோசமான குணம். நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நாம் இப்படி நடத்த மாட்டோம் இல்லையா? அப்படித்தான் இதுவும். இன்று நாங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறோம். பாகிஸ்தான் நல்ல அணி. இது கிரிக்கெட். இதில் மதம் அரசியலை கொண்டு வரக்கூடாது, என்று கூறினர்.

சென்னையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை ரசிகர்கள் கொண்டாடியதை வடஇந்திய நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சென்னை ரசிகர்கள் வேண்டுமென்றே வட இந்தியர்கள் மனதை புண்படுத்துவதற்காக இப்படி நடந்துக் கொள்வதாக வடஇந்திய ரசிகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். 

SCROLL FOR NEXT