வங்கதேசத்தை முதல் டி20 போட்டியில் வீழ்த்திய அமெரிக்கா அணி 
விளையாட்டு

வங்கதேசத்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா... டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி!

கே.காமராஜ்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நேற்று ஹூஸ்டன் நகரில் உள்ள பிரையேர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில், தவ்ஹித் ஹிரிடோய் 58 ரன்கள் விளாசினார். அந்த அணி 20 முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

அமெரிக்கா-வங்கதேசம் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்

அமெரிக்கா தரப்பில் ஸ்டீவன் டைலர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா அணி களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் டைலர் 28 ரன்களும் கேப்டன் மொனாங் படேல் 12 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த போதும், 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோரி ஆண்டர்சன் மற்றும் ஹர்மித் சிங் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆண்டர்சன் 34 ரன்களும், ஹர்மித் 33 ரன்களும் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் போட்டியில் வென்று அமெரிக்கா அசத்தல்

இதனால் 19.3 ஓவர்களில் அமெரிக்கா அணி 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் அமெரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது. அனுபவம் வாய்ந்த வங்கதேச அணியை அமெரிக்க அணி தனது முதல் போட்டியிலேயே வீழ்த்தி இருப்பது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT