தரிசனம்

செவ்வாய்க்கிழமையும் கார்த்திகை விரதமும்!

காமதேனு

செவ்வாய்க்கிழமையும் கார்த்திகை விரதமும் இணைந்த நாளில், முருகக்கடவுளை வணங்கிப் பிரார்த்திப்போம்.

முருகக்கடவுள் வழிபாட்டை, கெளமார வழிபாடு என்பார்கள். கெளமாரம் எனப்படும் முருக வழிபாடு மிக மிக எளிமையான வழிபாடு. முருகப்பெருமான் செவ்வாய் தோஷத்தைப் போக்குபவர். அதனால்தான், செவ்வாய்க்கிழமை என்பது முருகக் கடவுளை வணங்குவதற்கு உரிய நாளாகப் போற்றி வணங்கப்படுகிறது.

அதேபோல், பாலமுருகனை கார்த்திகேயப் பெண்கள் வளர்த்தார்கள் என்கிறது ஸ்கந்த புராணம். அதனால்தான் வேலவனுக்கு கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது. மேலும் 27 நட்சத்திரங்களில், முருகப்பெருமானுக்கு உரிய விரத நட்சத்திர நாளாக, கார்த்திகை நட்சத்திர நாள் போற்றப்படுகிறது.

தை மாதத்தில் பூசம், பங்குனி மாதத்தில் உத்திரம், வைகாசி மாதத்தில் விசாகம், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை என்றெல்லாம் போற்றிக் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு மாதமும் வருகிற கார்த்திகை நட்சத்திர நன்னாள், முருக வழிபாட்டுக்கு உகந்தநாளாகவும் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்ளும் நாளாகவும் வழிபடப்படுகிறது.

மாதந்தோறும் கார்த்திகை விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அதேபோல, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகக் கடவுளை ஆலயம் சென்று தரிசிப்பவர்களும் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே, முருகப்பெருமானுக்கு நைவேத்தியங்கள் படைத்து, கந்தசஷ்டி கவசமோ ஸ்கந்த குரு கவசமோ பாராயணம் செய்து பூஜிப்பவர்களும் உண்டு.

கந்தவேலனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் வெற்றிவடிவேலனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து நவம்பர் 8-ம் தேதியில் வந்திருப்பது ரொம்பவே விசேஷமானது. மேலும் அன்றைய நாளில் சந்திர கிரகணம் வருவதால், காலையிலும் கிரகணம் முடிந்த பிறகும் முருகப்பெருமானை பூஜிப்பதும் கிரகண நேரத்தில் கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்துகொண்டே இருப்பதும் நல்லது. நம்மை கிரக தோஷங்களோ, கிரகண தோஷங்களோ அண்டவிடாமல் வேலும் மயிலும் கொண்டு காத்தருளுவார் வேலவன்.

செவ்வாய்க்கிழமை காலையில் 9 மணிக்குள் முருகப்பெருமானை ஆலயம் சென்று தரிசித்து வாருங்கள். அப்படியில்லையெனில், வீட்டிலிருந்தபடியே முருகக் கடவுளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பிறகு சந்திர கிரகணத்தையொட்டி கோயில்களின் நடை சார்த்தப்பட்டுவிடும். இரவு 7 மணிக்கு மேல் ஆலயம் திறக்கப்படும்.

நாமும் கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடி நமக்குத் தெரிந்த முருக வழிபாடுகளைச் செய்துகொண்டே இருப்போம். கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு, வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு, அருகில் உள்ள முருகன் கோயிலுக்குக் கிரகணம் முடிந்ததும் சென்று வேலவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வேண்டிக்கொள்வோம்.

இன்று மாலையில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி அஸ்வினி, பரணி, கார்த்திகை, பூரம், பூராட நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரக்கார்களாக ஆச்சார்யர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஐந்து நட்சத்திரக்காரர்களும் கிரகணம் முடிந்ததும் முருகப்பெருமானையும் அம்பாளையும் நவக்கிரகத்தையும் தரிசித்து விளக்கேற்றி வழிபாடுகள் செய்வதும், தங்களால் முடிந்த ஏதேனும் தானங்களைச் செய்வதும் நற்பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்கியமாக, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகேயனை வழிபட்டு விளக்கேற்றி வேண்டிக்கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT