தரிசனம்

பரமேஸ்வர விண்ணகரம் : வைகுந்தநாத பெருமாள் ஆலய அதிசயம்!

வி.ராம்ஜி

காஞ்சிபுரத்தை, ‘நகரேஷூ காஞ்சி’ என்று பெருமையுடன் சொல்லுவார்கள். அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று அர்த்தம். இத்தனை சிறப்பு மிக்க காஞ்சி மாநகரில் உள்ள எல்லா ஆலயங்களுமே அற்புதமான அமைப்பும் சிற்ப வேலைப்பாடுகளும் கொண்டவை.

காஞ்சிபுரத்தில் உள்ள மங்களாசாசனம் பெற்ற 14 கோயில்களில் ஒன்று ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் கோயில் இதைப் பற்றிக் குறிப்பிடும் பல்லவர் காலக் கல்வெட்டுச் சாசனங்கள், ‘பரமேஸ்வர விண்ணகரம்’ என்றும், ‘பரமேஸ்வர விஷ்ணுகிரஹம்’ என்றும் தெரிவிக்கின்றன. வைணவக் கோயில் ஒன்றுக்கு ‘பரமேஸ்வரன்’ என சிவநாமம் அமைந்திருப்பது வியப்பைத் தருகிறதுதானே!

இந்தக் கோயிலை எடுப்பித்தது, பல்லவமல்லன் என்கிற இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னன். இந்த மன்னனைப் பற்றி வைகுந்தநாதர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டு, ‘பல்லவ மல்லனான பரமேஸ்வரன்’ என்று குறிப்பிட்டு, அவனுடைய இயற்பெயர் பரமேஸ்வரன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த மன்னன் கி.பி. 730-ல் துவங்கி 795 வரை சுமார் 65 வருட காலம் ஆட்சி செய்திருக்கிறான் என்கிறது கல்வெட்டுச் செய்தி.

இவனுடைய காலத்தில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார், இந்தக் கோயிலைப் பற்றிப் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார். அதில், ‘பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேச்வர விண்ணகரம் அதுவே’ என்று நந்திவர்மனின் புகழையும் குறிப்பிட்டுச் சிலாகிக்கிறார்.

அழகிய திருச்சுற்றுடன் கம்பீரமும் அழகும் ஒருசேரக் காட்சி தருகிறது திருத்தலம். அதன் உட்புறம் சுவருடன் இணைந்த திருச்சுற்று மாளிகை என்கிற மண்டபம். இந்த மண்டபத்தின் நான்கு பத்திகளையும் சிம்மங்களுடன் (சிங்கங்கள்) உள்ள தூண்கள் தாங்கி நிற்பது அத்தனை நுட்பமாக வடிக்கப்பட்டு பிரமிக்கவும் வியக்கவும் வைக்கின்றன. ஒவ்வொரு சிம்மமும் உயிர்ப்புடன் நிற்பதான பிரமிப்பையும் சற்றே பயத்தையும் தருகின்றன.

மண்டப உட்புறச் சுவரில், இரண்டு அடுக்குகளாகத் தொடர் சிற்பக் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு காட்சிக்குக் கீழேயும் பல்லவ கிரந்த எழுத்தில், அந்தக் காட்சிக்கு உரிய விவரங்கள் குறிப்புகளாக, கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுகள் இன்றைக்கும் இருக்கின்றன.

திருச்சுற்றுக்கு நடுவே பிரதான ஆலயமான பரமேஸ்வர விண்ணகரம் எனப் போற்றப்படும் வைகுந்தநாதப் பெருமாள் கோயில், கம்பீரமாகக் காட்சி தருகிறது. கருவறைக்கு மேலே ஒன்றன் மேல் ஒன்றாக, மூன்று தளங்களில் மூன்று மூலஸ்தானங்கள் அமைந்திருக்கின்றன. கீழ்த்தளத்தில், ஸ்ரீவைகுந்தநாதர் மேற்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார். அதையடுத்து, மேலே அமர்ந்த திருக்கோலத்திலும் அடுத்து கிடந்த திருக்கோலத்திலும் காட்சி தருகிறார்.

கருவறையின் புறச்சுவர் முழுவதும் திருமாலின் பல்வேறு திருக்கோலங்கள், காட்சிகளாக, புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பல்லவர், சோழர் அல்லது பாண்டியர் படைத்த எந்த வைணவ ஆலயத்திலும் இந்த அளவுக்குப் பேரழகு கொண்ட, பிரமிக்கத்தக்க சிற்பக் காட்சிகளைத் தரிசிப்பது அரிது என்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.

ஸ்ரீவிமானத்தின் மூன்று திசைகளிலும் உள்ளே சிறிய வாயில்கள் உள்ளன. இவை, கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரம் எனும் சுற்று அறைக்குக் காற்றும் வெளிச்சமும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன என்றால் இதை அந்தக் காலத்தில் எப்படிப் பார்த்துக் கட்டமைத்தார்கள் என்பது கேள்விக்குறிதான்!

கருடாழ்வாரின் தோளில் திருமால் அமர்ந்திருக்க, அருகே ஸ்ரீதேவி நிற்பது, சங்கு- சக்கரம் ஏந்திய திருமால் அமர்ந்திருக்க, அடியார்களும் உப தெய்வங்களும் தொழுதபடி நிற்பது, ஐந்து தலை நாகரின் கீழ் பரமபத நாதன் அமர்ந்திருக்க, ஸ்ரீமகள் அவரை வணங்கிப் போற்றுவது, தாமரை மலர் மீது மாலவன் நிற்க, இருபுறமும் சூரிய- சந்திரர் கையுயர்த்திப் போற்றவும், கீழே முனிவர்கள் நால்வர் அமர்ந்திருப்பதும், விஷ்வக்சேனருக்கு திருமால் பூமாலை சூட்டுவது, இரணியனை மடியில் கிடத்தி, உடல் பிளக்கும் நரசிங்கர் வடிவம் என கருவறையின் புறச்சுவர் முழுவதும் அழகு வாய்ந்த சிற்பக் காட்சிகளை கண்டு வியக்கலாம்.

மூலவரான வைகுந்தநாத பெருமாளையும், மேல் நிலைகளில் உள்ள அமர்ந்த, கிடந்த திருக்கோலக் காட்சிகளையும், புறச்சுவரில் காணப்படும் திருமாலின் அவதாரக் காட்சிகளையும் பார்த்து வியந்தபடி, திருச்சுற்று மாளிகைப் பத்தியில் நுழைந்து, இரு அடுக்குகளாகக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் உள்ள சிற்பத் தொடரை அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் அறிவதற்கு நாள் போதாது என்று பெருமிதத்துடன் சொல்கிறார் பாலாஜி பட்டர்.

அந்தத் திருமாளிகையில் பல்லவ குலத்தின் வரலாறு, புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. பல்லவ அரசர்களின் முடிசூட்டு விழாக்கள், அவர்கள் சாளுக்கியர்களோடும் பிற அரசர்களோடும் நிகழ்த்திய போர்க் காட்சிகள், வெற்றி விழாக்கள், பல்லவர் எடுப்பித்த கோயில்கள், நாட்டியக் காட்சிகள், இறைத் திருமேனிகள் என வரிசை வரிசையாகக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் இருப்பதைப் பார்த்து பல்லவர்களின் ரசனையையும் கலைத்திறனையும் பக்தியையும் கண்டு திளைத்துப் போவோம்!

குறிப்பாக, 2-ம் நந்திவர்மனாகிய பரமேஸ்வரன் எடுத்த இந்த ஆலயமான பரமேஸ்வர விண்ணகரத்தின் சிற்பக் காட்சியையும் இங்கு தரிசிக்கலாம். பல்லவ மன்னனின் வரலாற்று நிகழ்வுகள் உயிர்ச் சிற்பமாக நம் கண்ணெதிரே அப்படியே காட்சிகளாக, வடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, காஞ்சி ஸ்ரீகயிலாய நாதர் ஆலயத்தை எடுப்பித்தவனும், பல்லவ மன்னனின் முன்னோருமான ராஜசிம்ம பல்லவனும், அவன் தேவி ரங்கபதாகையும் நிற்கும் காட்சி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

வைகுண்டநாத பெருமாள் கோயில் என்கிற பரமேஸ்வர விண்ணகரம், மிகத் தொன்மையான ஆலயம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பாடிய க்ஷேத்திரம். சிற்பங்களுக்கும் வைஷ்ணவம் தழைத்தோங்கியிருந்ததற்குமான சான்றுகளாகத் திகழும் இந்த ஆலயத்துக்கு வந்தாலே, நல்லதிர்வுகளை உணரலாம். பெருமாளின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்!

SCROLL FOR NEXT