தரிசனம்

தம்மத்தின் பதம் - 5: பூ போன்ற மனம்!

யாழன் ஆதி

பயனற்ற பொருட்கள்

வீசியெறியப்பட்ட

சாலையோர சகதியொன்றில்

செந்தாமரை மலர் பூக்கும் (தம்மபதம் 58)

பௌத்தம் இயற்கையின் பேரருளுடன் எப்போதும் இணைந்தது. புத்தரின் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் இயற்கையின் அடையாளங்கள் இருந்துள்ளன. அவர் பிறப்பிலிருந்து பரிநிர்வாணம்வரை அது தொடர்கிறது. அவருக்குப் பிறகு கூட்டப்பட்ட பௌத்த சங்கக்கூட்டங்களில் அவரது போதனைகள் இலைகளில் எழுதப்பட்டு 3 கூடைகளில் எடுத்துச் செல்லப்பட்டன. பிடகம் என்னும் பாலிச் சொல்லுக்கு ’கூடை’ என்று பொருள். 3 கூடைகள் திரிபிடகங்கள். திரிபிடகத்தில் மட்டும் 165 தாவர இனங்களின் பெயர்கள் சுட்டப்பட்டிருப்பதாக, ராபர்ட் சீசர் சில்டர்ஸ் என்னும் அயர்லாந்து அறிஞர் கூறுகிறார்.

வாழ்க்கை இலை போன்றது!

தம்மபதத்தில், பூக்களை வைத்துக் கூறப்பட்ட வாழ்வியல் நெறிகள் இத்தகு கருத்துகளுக்கு வலு சேர்க்கின்றன. மாலையைத் தொடுப்பவர் மலர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்து தொடுப்பதைப் போலத்தான் நல்வினையாற்றியோர் வழிகளைத் தம்மப் பயிற்சிப் பெற்ற ஒருவர் தேர்ந்தெடுக்க முடியும். தம்மம் என்பது நம்பப்படுவது இல்லை; அது பயிற்சியால் மேற்கொள்ளப்படுவது. நடவை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்ட விவசாயி, எப்படி அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பாரோ அதுபோல் ஒருவர் எப்போதும் தம்மத்தையே எண்ண வேண்டும்.

இந்த வாழ்க்கை இலையைப் போன்றது; நீர்க்குமிழிப் போன்றது. உலகம் அழியக்கூடியது. இதில் துன்பத்திலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். உறங்கிக் கொண்டிருக்கும் கிராமத்தை இரவில் வரும் வெள்ளம் அடித்துச் செல்வதைப்போல, இன்பம் துய்ப்பதையே சதா எண்ணிக் கொண்டிருக்கும் மனதை மரணம் எடுத்துச் செல்லும். உடலால் செய்யக்கூடிய தீமைகளாகி கொலை, களவு , காமம் ஆகியனவற்றில் கொள்ளும் இன்ப நுகர்ச்சி மலர்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் மனம், மரணம் உண்ணும் உணவாகிவிடுகிறது என்கிறார் புத்தர்.

தீங்கிழைக்கலாகாது!

ஒரு மலரை அதன் வண்ணத்தை, அதன் வாசனையை, அதன் அழகைச் சிதைக்காமல் தேனீ எப்படி தேனை மட்டும் உறிஞ்சிக் கொள்கிறதோ, அப்படித்தான் பௌத்தர்களும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் எதற்கும் தீங்கிழைக்க முடியாது.

மற்றவர் செயல்களில் தலையிடாமல் தன்னை அறிதல் தம்மம். எந்தச் செயலையும் செய்யாமல் வெறும் பேச்சை மட்டும் பேசிக்கொண்டிருப்பவர்கள், வாசமில்லாத, கனி தராத, மலரைப் போன்றவர்கள். அவர்களால் பயனேதும் இல்லை.

நல்லொழுக்கம் என்னும் நறுமணம்!

ஒருமுறை சாக்கா என்ற மன்னன், புத்தரின் முக்கிய சீடர் காஸப்பாவுக்கு தானம் தர விரும்பினார். ஆனால், அதில் ஒரு தடை இருந்தது. பெரும் பணக்காரர்களிடமோ அல்லது மன்னன் போன்ற அதிகாரங்களிடமிருந்தோ தானம் பெறுவதில்லை என்பது காஸப்பாவின் கொள்கையாக இருந்தது. ஏழை யாராவது ஒருவரிடம்தான் தானம் பெற வேண்டும் என்று அவர் கருதினார். இதை அறிந்த சாக்கா மன்னன், ஏழையைப்போல் தன்னைப் புனைந்துகொண்டு காஸப்பாவுக்கு தானம் வழங்கினார்.

இதை புத்தர், “சாக்கா, காஸப்பரின் நற்குண வாசனையை அறிந்திருந்தார் அதனால்தான் அப்படிச் செய்தார்” என்று கூறினார். காற்றின் எதிர்திசையில் பூக்களின் மணமோ சந்தனத்தின் மணமோ பரவுவதில்லை. காற்றின் திசையில்தான் பரவும். ஆனால், நல்மனம் கொண்டோரின் புகழோ எட்டுத்திக்கும் பரவும் என்கிறது தம்மபதம்.

நறுமணங்கள் மறைந்துபோகலாம். ஆனால், நல்லொழுக்கம் என்னும் நறுமணம் எல்லா உயரங்களுக்கும் பரவும். நன்னெறி, விழிப்பின் நிலை கொண்ட ஒழுக்கவியலாளர்களை தீயன் அடைய, அவனால் வழிகளை உருவாக்கவோ காணவோ முடியாது. அவர்கள் நாவால் செய்யக்கூடிய தீமைகளாகிய பொய், இன்னொருவரைப் பழித்துக் கூறல், ஏசுதல், வெட்டிப்பேச்சு பேசுதல் போன்றவற்றை எப்போதும் செய்வதில்லை.

சான்றாண்மைக் கொண்டவர்களாகிய அவர்கள் மனதால் செய்யக்கூடிய பேராசை, பகைமை, தவறான அணுகுமுறைகள் ஆகியவற்றையும் கொள்வதில்லை. அவர்களின் வாழ்க்கை அழகிய வாசம் வீசும் பூக்களைப் போன்று சுற்றுப் புறத்தை அழகானதாகவும் வாசமிக்கதாகவும் வைத்திருக்கிறது.

மதிப்பற்ற மானுடத்தில்

ஒளியூட்டப்பட்ட ஒருவர்

இருளகற்றும் உயரறிவுப்

பெற்றவரே (தம்மபதம் 59)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
SCROLL FOR NEXT