தரிசனம்

மகா சிவராத்திரி : மங்காத செல்வம் தரும் விரத முறைகள்!

காமதேனு

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறப்பானதொரு விரதமாக போற்றப்படுவது, மகா சிவராத்திரி வைபவம்தான்! அதனால்தான் மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமானை வழிபட்டால் நமக்குப் புண்ணியங்கள் வந்து சேரும் என்றும் நம் முன் ஜென்மப் பாவங்கள் முதலானவை கூட விலகும் என்கிறது சிவபுராணம். வைஷ்ணவத்தில் வைகுண்ட ஏகாதசி விடியவிடிய தூங்காமல் விரதம் மேற்கொள்ளச் சொல்கிறது. அதேபோல், சைவத்தில் மகா சிவராத்திரியில் கண்விழிக்கச் சொல்கின்றன சாஸ்திரங்களும் ஆகமங்களும்!

சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் நம் வாழ்வில் இதுவரை பட்ட துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இல்லற வாழ்வில், மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தந்தருளுவார் ஈசன் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

’’மனிதர்களாகிய நமக்கு, மிகவும் முக்கியமானது இரண்டு விஷயங்கள்... ஒன்று உணவு, இன்னொன்று நல்ல தூக்கம். இந்த இரண்டையும் ஒருநாள் மட்டும் விலக்கிவைத்துவிட்டு, சிவபெருமானை நினைத்து, விரதமிருப்பதுதான் மகா சிவராத்திரி எனும் புனித நன்னாளின் மிக முக்கிய நோக்கம். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வை அடைவது எளிது. நம் எண்ணங்கள் தெளிவாகும். தெளிவான எண்ணத்துடன் நினைத்தால், எந்தக் காரியத்திலும் ஜெயம் உண்டாவது உறுதி’’ என்கிறார் நடராஜ குருக்கள்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளன. ஒருவரை, தன் வாழ்நாளில்... இந்த மகா சிவராத்திரி விரதத்தை 24 வருடங்கள், அதாவது 24 மகா சிவராத்திரிகள் அல்லது 12 வருடங்கள்... அதாவது 12 மகா சிவராத்திரிகள் மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறது சாஸ்திரம். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ முழுக்க முழுக்க சிவ சிந்தனையில் ஐக்கியமாகி இருப்பது மிக மிக அவசியம். இதனால், நம் வாழ்வில் சகல வளமும் பெறலாம்; சந்ததி சிறக்க வாழலாம்!

மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

’’மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இயலாதவர்கள், இரவுப் பொழுதில் எளிமையான, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை எடுத்துக் கொள்ளலாம். மகாசிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப தூப ஆராதனை செலுத்தி வழிபட வேண்டும். இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கோ, நமக்கு மிக மிக விருப்பமான சிவாலயத்துக்கோ சென்று முறைப்படி தரிசனம் மேற்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்துவிட்டு, சிவபூஜையை இல்லத்தில் செய்யவேண்டும். இதையடுத்து, அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுவது மகத்துவம் மிக்கது.

இந்த பூஜையின் போது ’சிவாய நம’ என்றோ ‘நமசிவாய’ என்றோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது நமக்குள் மனோ சக்தியை அதிகரிக்கும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும். அன்றைய தினம் இரவில் உறங்காமல், நான்கு வேளையும் தூங்காமல் இரவு வேளைகளில் நடைபெறும் பூஜைகளை தரிசித்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனாரை வழிபட்டு,நம்மால் முடிந்த தானங்களை, அன்னதானங்களை ஏழைகளுக்கு வழங்கி, விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது

மகா சிவராத்திரி எனும் புண்ணிய நன்னாளில், மறக்காமல் விரதம் மேற்கொள்வோம். நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் தானங்கள் செய்து, ஈசனின் அருளையும் புண்ணியங்களையும் பெறலாம்.

மகேசனைத் தரிசிப்போம். மங்காத செல்வ கடாட்சங்களைப் பெறுவோம்!

18.02.2023 மகா சிவராத்திரி திருநாள்.

SCROLL FOR NEXT