தரிசனம்

அருள்தரும் சக்தி பீடங்கள் - 45

கே.சுந்தரராமன்

அம்மனின் சக்தி பீட வரிசையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் திருவெண்காடு பிரம்மவித்யா சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில், விமலை பீடமாகப் போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 11-வது தலம் ஆகும்.

பிராண சக்தி பீடம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகங்கள் பாடியுள்ளனர், நவக்கிரக தலங்களில் இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

தல வரலாறு

மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, வரம் பெற்றான். இதன் காரணமாக, தேவர்களுக்கு பல இன்னல்களை அளித்து வந்தான். இதுகுறித்து கவலை அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானின் ஆலோசனைப்படி தேவர்கள், வேற்று உருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். தேவர்களைத் தேடி திருவெண்காட்டுக்கும் வந்தான் அசுரன். சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து, அவரது அருளால் சூலாயுதத்தைப் பெற்றான். சூலாயுதத்தை வைத்து ரிஷபதேவருக்கு துன்பம் விளைவித்து அவரைக் காயப்படுத்தினான்.

வருத்தமடைந்த ரிஷபதேவர், சிவபெருமானிடம் முறையிட்டார். கோபம் கொண்ட சிவபெருமான், தனது ஐந்து முகங்களில் (சத்யோஜாதம், வாமதேவம் அகோரம், தத்புருஷம், ஈசானம்) ஈசான முகத்தில் இருந்து அகோர மூர்த்தியை தோன்றச் செய்தார். அகோர உருவத்தைப் பார்த்தவுடன் அசுரன், சிவபெருமானிடம் சரண் புகுந்தான்.

அப்படி சரணடைந்த அசுரனை, அகோர மூர்த்தியின் காலடியின் இன்றும் காணலாம். சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி நிறுத்த மண்டபத்தில், காயம்பட்ட ரிஷப தேவரைக் காணலாம்.

ஆதி சிதம்பரம்

காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், சாய்க்காடு, மயிலாடுதுறை ஆகும். திருவெண்காடு தலத்தில் மூன்று மூர்த்திகள், மூன்று தீர்த்தம், மூன்று தலவிருட்சம் இருப்பது தனிச்சிறப்பு. சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காண முடியும். சிவபெருமான் இங்கு நவதாண்டவம் புரிந்ததால், இத்தலம் ‘ஆதி சிதம்பரம்’ என்று அழைக்கப்படுகிறது.

மேலும், நடராஜ சபையும், ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கு உண்டு. தினமும் ஸ்படிக லிங்கத்துக்கு 4 அபிஷேகங்களும், நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இத்தலத்தில் பட்டினத்தார் சிவ தீட்சை பெற்றுள்ளார்.

அகோர மூர்த்தி

சுவேதாரண்யர், திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் இத்தல ஈசன், லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அகோர மூர்த்தியின் வீரக் கோலம் இத்தலத்தில் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. 64 சிவ மூர்த்தங்களில் இந்த உருவம் 43-வது உருவம் ஆகும். நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து, வலது காலை பெயர்த்து அடியெடுத்து முன்வைக்க முனைவது போன்று தன் நடையழகை, சிவபெருமான் காட்டி அருள்கிறார். மூலவரைப் போன்று உற்சவரும் வீரச் செறிவைக் காட்டும் கடுமையான கோலத்தில் இருந்தாலும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிலையில்தான் உள்ளார்.

சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால், ‘அகோரமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணிக்கு இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரம்ம வித்யாம்பிகை

மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற பெயருடன் வளர்ந்தார் பார்வதி தேவி. சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து, அவரை இத்தலத்தில் கரம் பற்றினார். ஒருசமயம், பிரம்ம தேவருக்கு வித்தை கற்பித்ததால், பிரம்ம வித்யாம்பிகை என்ற பெயரால் அம்பாள் அழைக்கப்படுகிறார். கல்வியில் சிறந்து விளங்க, பிரம்ம வித்யாம்பிகை அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

நான்கு கரங்களுடன் இத்தலத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார், இடது மேற்கரத்தில் தாமரை, வலது மேற்கரத்தில் அக்கமாலை வைத்துள்ளார். வலது கீழ்க்கரம் அபயக்கரமாகவும், இடது கீழ்க்கரம் திருவடி பெருமைகளை பேசுவதாகவும் உள்ளன. தாமரை செல்வச் செழிப்பையும், அக்கமாலை யோகத்தையும் உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது.

திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணல் எல்லாம் சிவலிங்கங்களாகவும் தோன்றின. பூமியில் கால் வைக்கவே யோசனை செய்த சம்பந்தர், அம்பாளை நினைத்து, ‘அம்மா’ என்று அழைத்தார். சம்பந்தர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த பெரியநாயகி, அவரை இடுப்பில் தூக்கிக்கொண்டு கோயிலுக்கு வந்தார். சம்பந்தரை இடுப்பில் சுமந்தபடி உள்ள பெரியநாயகி விக்கிரகம், கோயில் பிரகாரத்தில் உள்ளது.

காளிதேவி

இங்குள்ள காளி சுவேத வனத்தில் எழுந்தருளிய காளியாக இருப்பதால், ‘சுவேத காளி’ என்று அழைக்கப்படுகிறார். எட்டு கரங்களில் பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் உள்ளிட்ட ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். வலது காலை பீடத்தின் மீது உயர்த்திக் கொண்டு, இடது காலை தொங்கவிட்டுள்ளார். காளியை வணங்கினால், கலைகளில் சிறக்க வைப்பார். எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவராக அஷ்டபுஜ துர்கை அருள்பாலிக்கிறார், மகிஷனை அழித்த கோபம் இல்லாமல் சாந்தமான முகத்துடன் துர்கை அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

புதன் பகவான்

வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதன் பகவான், பிரம்ம வித்யாம்பிகையைப் போலவே கல்வி, பேச்சுத் திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பக்கலை, மருத்துவம், மொழிப் புலமை ஆகியவற்றில் சிறக்க அருள்புரிவார். கோயிலுக்கு இடது புறத்தில் புதன் பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சந்திரன் சந்நிதி, சந்திர புஷ்கரிணி ஆகியவை புதன் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளன.

இத்தல ஈசனை வழிபட்டு, புதன் பகவான் நவக்கிரங்களில் ஒருவரானார். மேலும், ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். புத்திர பாக்கியம் அமைய, அறிவு மேம்பட, நரம்புத் தளர்ச்சி குறைய புதன் பகவான் அருள்புரிவார். புத்திர தோஷம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு திருப்பணிகளுக்கு பொருளுதவி செய்வது வழக்கம்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலின் கிழக்கு வாயில் அருகில் மெய்க்கண்டார் பாட சாலை உள்ளது, உள்ளே நுழைந்ததும் இடதுபுறத்தில் அக்னி தீர்த்தம், கரையில் விநாயகர், மெய்க்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிரகாரத்தில் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. சூரிய தீர்த்தக் கரையில் சூரிய தீர்த்த லிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம், சுப்பிரமணியர் சந்நிதி ஆகியவற்றைக் கடந்து சென்றால் பிரம்ம வித்யாம்பிகை சந்நிதியை அடையலாம். இத்தல விநாயகர் ‘வெள்ளைவாரணர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோயில் அருகே மணிகர்ணிகை ஆறு ஓடுகிறது. இது காசியில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களுக்கு இணையானதாக போற்றப்படுகிறது. காசியில் விஷ்ணு கயா உள்ளதுபோல, இங்கு ருத்ர கயா (வடவால் மரத்தடியில்) உள்ளது. 21 தலைமுறையில் வரும் பிதுர் சாபங்களுக்கு இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

இத்தலத்தில் மூன்று மூர்த்திகள் (திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), மூன்று சக்தி (பிரம்ம வித்யாம்பிகை, காளி, துர்கை), மூன்று தீர்த்தங்கள் (அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்கள்), மூன்று தலவிருட்சங்கள் (வடவால், வில்வம், கொன்றை) உள்ளன. சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தின் போது, அவரது முக்கண்களில் இருந்து சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்கள் என்று கூறப்படுகிறது.

சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான இத்தலத்தைப் பற்றி வால்மீகி ராமாயணம், சிலப்பதிகாரம், சமண, வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ளது. பட்டினத்தாருக்கு குருநாதராக இருந்து சிவபெருமான் தீட்சை அளித்த விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருவெண்காட்டுப் புராணம்

சைவ எல்லப்ப நாவலர் என்பவர் 16-ம் நூற்றாண்டில் ‘திருவெண்காட்டுப் புராணம்’ என்ற நூலை இயற்றியுள்ளார். திருவெண்காட்டில் கோயில் கொண்டுள்ள ஈசன் மீது பாடல்கள் அமைந்துள்ளன. பாயிரம் மற்றும் 18 சருக்கங்கள் கொண்ட இந்த நூலில் 614 பாடல்கள் உள்ளன.

மெய்க்கண்டார் மூன்று வயது வரை மௌனமாக இருந்தது, பின்னர் பரஞ்சோதி முனிவர் உபதேசம், மெய்க்கண்டார் பேசியது, தாய்மாமன் திருவெண்ணெய் நல்லூர் காங்கேய பூபதியால் வளர்க்கப்பட்டது, அவரது வாழ்க்கை வரலாறு, சிவஞான போதம் அருளியது என்று சைவ சித்தாந்த கருத்துகள், திருவெண்காட்டு கோயில் வரலாறு போன்ற அனைத்து செய்திகளையும் இந்நூல் உரைக்கிறது. ‘திருத்தொண்டர் புராண சாரம்’ என்ற மற்றொரு நூலையும், இப்புலவர் இயற்றியுள்ளார்.

திருவிழாக்கள்

திருவெண்காட்டு கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிஷேகம், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தல், ஆனி உத்திரத்தில் நடராஜர் அபிஷேகம், ஆடியில் பட்டினத்தாருக்கு சிவ தீட்சை அளித்தல், அம்பாளுக்கு ஆடிப்பூர உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன.

ஆவணியில் நடராஜர் அபிஷேகம், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி விழா, புரட்டாசியில் தேவேந்திர பூஜை, நவராத்திரி விழா, ஐப்பசியில் கந்த சஷ்டி விழா, கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் அகோரமூர்த்திக்கு மகாருத்ராபிஷேகம், கார்த்திகையில் தீப விழா, மார்கழி திருவாதிரையில் நடராஜர் அபிஷேகம், தை மாதத்தில் சங்கராந்தி விழா ஆகியவையும் நடைபெறுகின்றன.

மாசி மாதத்தில் இந்திர பெருவிழா 13 நாட்கள் நடைபெறுகிறது. இது இந்திரனால் நடத்தப்படும் பிரம்மோற்சவம் என்ற சிறப்பைப் பெறுகிறது. சிலப்பதிகாரத்தில் இந்திர விழா நடைபெற்றது பற்றி குறிப்பிட்டுள்ளதைப் போலவே இத்தலத்திலும் இந்திர விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பங்குனி மாதத்தில் அகோரமூர்த்திக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.

இவை தவிர தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, தாயார் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதிவுலா வருவதுண்டு.

SCROLL FOR NEXT