தொடர்கள்

சமூக ஊடக வானவில்-68: நீலப் பறவைக்குப் போட்டியாக சிறகு விரிக்கும் மஞ்சள் பட்சி!

சைபர்சிம்மன்

ட்விட்டருக்கு மாற்றாக விளங்கக்கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘கூ’ இந்தியாவில் உருவான சேவை என்பது மட்டும் அல்ல, இந்தியத் தன்மையோடு உருவானது என்பதுதான் முக்கியமானது.

ட்விட்டர் நீலப்பறவை என்றால், இந்திய ‘கூ’ மஞ்சள் பறவையாகப் பறக்கிறது. தற்போது நீலப்பறவை சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள சூழலில், மஞ்சள் பறவை சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அதோடு, ட்விட்டரின் தலைமையகமான அமெரிக்காவில் அறிமுகமாகவும் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே பிரேசில், நைஜிரியா உள்ளிட்ட நாடுகளில் ‘கூ’ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற நாடுகளையும் தனது பார்வையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளால் ட்விட்டர் பயனாளிகள் அதிருப்திக்கு உள்ளாகி, மாஸ்டோடான், கோஹோஸ்ட் போன்ற குறும்பதிவு சேவைகள் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், இந்திய ‘கூ’வும் தன்னளவில் பயனாளிகளை ஈர்த்து வருகிறது.

‘கூ’வின் சிறப்பசங்களைப் பார்ப்பதற்கு முன் அதன் வரலாற்றைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். கூவின் வரலாறு ஒரு குறும்பதிவில் அடங்கிவிடக்கூடிய அளவுக்கு சுருக்கமானதுதான். 2020-ல் தான் ’கூ’ அறிமுகமானது. ஆனால், அது அறிமுகமான காலம் மிக பொருத்தமானது என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையெனில், இப்போது ட்விட்டருக்கு மாற்று சேவையாகப் பேசப்பட்டு கொண்டிருக்காது.

அந்த வகையில் கூ நிறுவனர் ஆப்ரமேயா ராதாகிருஷ்ணாவை தொலைநோக்கு மிக்கவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ட்விட்டருக்கு மாற்று தேவை என்பதை உணர்ந்து அவர், இணை நிறுவனர் மயங்க் பிடாவடாகவுடன் ‘கூ’வைத் தொடங்கினார். சொல்லப்போனால், ட்விட்டருக்கான இந்திய மாற்று தேவை என நினைத்தார்.

‘கூ’வின் இந்தியத் தன்மை என்பது இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் அறிமுகமானதுதான். பெங்களூருவைச் சேர்ந்த அதன் முதல் சேவை கன்னட மொழியில் அறிமுகமானது. இன்று பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் சேவை அளிப்பதோடு, போர்ச்சுகீசியம் உள்ளிட்ட அயல் மொழிகளிலும் செயல்படுகிறது.

உண்மையில் உள்ளூர் மொழிகளில் செயல்படும் தன்மையே பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ‘கூ’ வரவேற்பு பெறக் காரணம்.

இந்த இடத்தில், ‘கூ’ நிறுவனர் பற்றி கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம். ஆப்ரமேயா ராதாகிருஷ்ணா இந்திய ஸ்டார்ட் -அப் பரப்பில் துடிப்பானவர் என்பது மட்டும் அல்ல, புதிய நிறுவனங்களைத் தொடங்குவதை ஒரு செயலாகவே வைத்திருப்பவர். ஓலா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட டாக்சி பார் ஷுயர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை முதலில் துவக்கியவர், அதன் பிறகு வோகல் (Vokal) எனும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

வோகல் சேவையை இந்திய கோரா என வர்ணிக்கலாம். கேள்வி பதில் செயலியான வோகல், இந்திய மொழிகளில் கேள்வி கேட்டு பதில் பெற வழி செய்கிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் அந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

கோரா சர்வதேச அளவில் பிரபலமாக இருந்தாலும் இந்திய மொழிகளில் இதே போன்ற சேவை தேவை எனும் உணர்வே வோகல் சேவை அறிமுகமாக காரணமானது. இதே புரிதலுடன்தான், ‘கூ’ சேவையும் அறிமுகமானது.

இப்போது ’கூ’ சேவையின் அம்சங்களைப் பார்க்கலாம். ட்விட்டர் போலவே ’கூ’வும் குறும்பதிவு சேவைதான் என்பதால், ட்விட்டரில் உள்ள பெரும்பாலான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. எனினும், அதன் தோற்றமும், இடைமுகமும் மாறுபட்டிருப்பதை உணரலாம்.

‘கூ’ சேவையில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைத் தேர்வுசெய்து பயன்படுத்தலாம். செயலி வடிவிலும், இணையதள வடிவிலும் பயன்படுத்தலாம். குறும்பதிவுகளுக்கான டைம்லைன் தவிர, வீடியோ, கிரிக்கெட், கருத்துக்கணிப்புகள் ஆகிய அம்சங்களையும் முகப்புப் பக்கத்தில் காணலாம். ட்விட்டர் போலவே குறும்பதிவுகளை வெளியிடுவதோடு, பயனாளிகளைப் பின்தொடரலாம். தேடல் வசதியும் இருக்கிறது. பிரபலமான ஹாஷ்டேகளையும் பார்க்கலாம்.

அதன் பயனாளிகளில் பிரபலங்களையும், நட்சத்திரங்களையும் முகப்புப் பக்கத்திலேயே பார்க்கலாம் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

ட்விட்டர் வளர்ச்சிக்கு நட்சத்திரப் பயனாளிகள் முக்கியப் பங்கு வகித்தனர் என்பதை இங்கு நினைவில் கொள்வது நல்லது. ஆரம்ப நிலையில், ட்விட்டர் பிரபலங்களையும், நட்சத்திரங்களையும் தேடிப்போய் தனது சேவையில் இணையுமாறு கேட்டுக்கொண்டதாக அறிய முடிகிறது. பிரபலங்கள் ட்விட்டரில் இணைந்த நிலையில் அவர்கள் ரசிகர்களும் ட்விட்டரைத் தேடி வந்தனர்.

‘கூ’ அறிமுகமாகும்போதே இந்தியப் பிரபலங்களை நட்சத்திரப் பயனாளிகளாகக் கொண்டு அறிமுகமானது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடங்கி, சத்குரு, மம்தா பானர்ஜி, நிதின் கட்கரி என பல பிரபலங்களை ‘கூ’வில் பார்க்கலாம். சர்வதேசப் பிரபலங்களும் உண்டு. புதிய இணையதளங்கள் மற்றும் செயலிகளை கண்டறிய உதவும் சமூக ஊடக சேவையான பிராடக்ட் ஹண்ட் நிறுவனர் ரயான் ஹோவரும் ‘கூ’ பயனாளியாக இருக்கிறார்.

ஆங்கிலம் தெரிந்தவர்கள் ட்விட்டரைப் பயன்படுத்தட்டும், மற்றபடி இந்திய மொழிகள் மட்டுமே அறிந்தவர்களுக்காக ‘கூ’ இருக்கிறது எனும் நம்பிக்கையுடனே இந்தச் சேவை அறிமுகமானது. இது அறிமுகமான நிலையில் சீன செயலிகள் பல இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் இந்தியச் சேவையாக கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு தற்சார்பு இந்தியா ஸ்டார்ட்-அப் போட்டியிலும் வெற்றி பெற்றது. இப்போது ட்விட்டர் சர்ச்சைக்கு நடுவே சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

’கூ’ சேவையைப் பயன்படுத்த: https://www.kooapp.com/feed

 (தொடரும்)

SCROLL FOR NEXT