அமெரிக்க மாஸ்டோடன்
அமெரிக்க மாஸ்டோடன் 
தொடர்கள்

சிறகை விரி... உலகை அறி-77: மனிதரோடு இணக்கமாக வாழ்ந்த ‘அரக்கன்’!

சூ.ம.ஜெயசீலன்

மழை நின்ற பின்னிரவில் தேரைகளின் கச்சேரி... நீர் விழுங்கிய நிலத்தில் எறும்புகளின் பேரணி... கறை தெளிந்த குளத்தில் குறுமீன்களின் கும்மாளம்... சிறகு தெளிக்கும் நீர்த் துளியில் பறவைகளின் ஆரோகணம்... உயிர்த்துடிப்பில் உணர்வு கலக்கும் இயற்கையின் பெருங்கருணை!

மனித வரலாற்றைப் பார்த்துவிட்டு, பறவைகளின் பரிணாமத்தை அறிய அடுத்த அறைக்கு நடந்தபோது புத்தகக் கடையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இயற்கை வரலாறு மற்றும் பாதுகாப்பு குறித்த புத்தகங்கள், படங்கள், குறுந்தகடுகள், பேனாக்கள், பொம்மைகள் இருந்தன. முக்கியமான தாவர இலைகள், அதன் முக்கியத்துவம் உள்ளிட்ட தகவல்கள் அச்சிடப்பட்ட அட்டைகளை வாங்கினேன். சுற்றுச்சூழல் காக்கப் போராடுகிறவர்கள் குறித்த புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் படமெடுத்தேன்.

பறவைகளின் வரையறை

நம் வீட்டுத் தோட்டத்தில் தொடங்கி, தொலைதூர நாடுகள் வரை எல்லா இடங்களிலும் பறவைகள் இருக்கின்றன. தங்களுக்கென தனித்த குணநலன்களுடன், அதேவேளையில், நிறைய வித்தியாசங்களுடன் பறக்கின்றன. உலகில் மொத்தம் 10 ஆயிரம் பறவை இனங்கள் இருப்பதை அருங்காட்சியகத்தில் அறிந்தேன்.

‘பறவைகளை பறவைகள்தான் என்று எப்படி வரையறுப்பது?’ என்றொரு கேள்வியை வாசித்தேன்.

  • ‘சிறகுகள் இருக்கும்’ என்று சொல்லலாமா? வௌவால்களுக்கும், துளைபோடும் வண்டுகளுக்கும் சிறகுகள் உள்ளனவே, அதற்காக இரண்டும் பறவையாகிவிடுமா? வௌவால்கள் பாலூட்டி அல்லவா!

  • ‘பறக்கும் அனைத்தையும் பறவைகள்’ என்று சொல்லலாமா? பறக்க முடியாது என்றாலும் (நெருப்புக்கோழி, ஈமு கோழி, கிவி) சிலவற்றை பறவைகள் என அழைக்கிறோமே!

  • மேலும், பாலூட்டிகள் போல, வெப்பநிலையில் மாறாததாக (Warm-blooded) சில உள்ளன. ஆனால், ஊர்வனபோல முட்டையிட்டு குஞ்சுபொறிக்கின்றவே?!

எனவே, நிகழ்காலத்தில் பறவைகளில் பொதுவாகத் தென்படும் அம்சங்களை மட்டும் கொண்டு - உதாரணமாக அலகு, இறக்கை, வளைந்த கழுத்து தண்டு - பறவையின் குழுக்களை அறிவியலாளர்கள் வரையறுக்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் ஏறக்குறைய 10 லட்சம் மாதிரிகள், அதாவது, உலகம் இதுவரை அறிந்துள்ள பறவைகளில் ஏறக்குறைய 95 விழுக்காடு பறவைகளின் மாதிரிகள் இங்கு உள்ளன.

இயற்கையின் வானவில்

காற்றை அசைத்து இசைத்த எண்ணற்ற பறவை இனங்களின் இறக்கைகளைப் பார்த்தேன். அதில்தான் எத்தனை தனித்துவங்கள்! கறுப்பு நிறத்தில்; உடலில் இறகு இணையும் இடத்தில் பழுப்பு நிறம்... மற்ற இடமெங்கும் கருமை நிறத்தில்; வரி வரியாக சில இறக்கைகள்; அலையலையாக சில வடிவங்கள்; முழுதும் புள்ளிகள்; சுற்றிலும் கருப்பு நடுவில் மட்டும் வெள்ளை; உடலில் இருந்து அகலமாகப் புறப்பட்டு கோடுபோல மாறும் இறக்கைகள்.

இறக்கைகள்

வீட்டு முற்றத்தில் கொத்தும் கோழிகளில் தொடங்கி, கோழிகளை ஏமாற்றி குஞ்சு தூக்கும் பருந்துவரை இறக்கைகளைக் கவனித்துப் பார்த்திராத எனக்கு ஒவ்வொரு இறக்கையும் இயற்கையின் வானவில்லைக் காட்டியது.

மற்றொரு கண்ணாடிப் பெட்டியில், கூர்மையான, வளைந்த, விரிந்த, நீளமான, குட்டையான அலகுகள் உள்ளன. அதன் அருகிலேயே, கூரான நகம் உள்ள கால்கள், நீளமான விரல்களின் நுனியில் மட்டும் சிறிதாக இருக்கும் கூர் நகங்கள், கொத்தித் தூக்கும் குறடுபோல வளைந்த நகங்கள், விரல்களுக்கிடையே சதையற்ற அல்லது சதையால் இணைந்துள்ள பாதங்கள் உள்ளன.

பறவைகளின் செட்டைகள் மட்டுமே தனியாக ஒரு கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. தன் குஞ்சுகளை செட்டைக்குள் அணைத்து உறங்கும் பறவைகளையும், முழுமையாக செட்டைகளை விரித்துப் பறக்கும் பறவைகளையும் பார்க்கும்போதெல்லாம், வெளிப்புறத்தைத்தான் பொதுவாகப் பார்த்திருப்போம், இங்கே செட்டைகளின் உட்புறத்தை நாம் பார்க்கும்படி பரப்பி வைத்திருக்கிறார்கள். உட்புறம், இறகுகள் இரண்டு மூன்று அடுக்குகளாக, அல்லது ஒன்றின் மேல் ஒன்று நெருக்கமாக அல்லது தொட்டும் தொடாமலும் வித்தியாசங்களோடு இருக்கிறன.

இறக்கை, அலகு, நகம், செட்டை அனைத்தின் கீழேயும் அந்தந்தப் பறவைகளின் பெயர்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாதிரிகள் எந்த ஆண்டு எங்கு கிடைத்தன என்பன போன்ற தகவல்களோடு வைத்திருக்கிறார்கள். ஆடையில் விழுந்த எச்சங்களுக்காகப் பறவைகளைச் சபிக்கிற நாம், வாழ்வின் அதன் மிச்சங்களை இங்கு ரசிக்கலாம்.

ரீங்காரச் சிட்டு

ரீங்காரச் சிட்டு

கண்ணாடிப் பெட்டி சுவரில் தொங்குகிறது. 1800-ம் ஆண்டு செய்யப்பட்ட அதனுள்ளே செயற்கை மரம் உள்ளது. அதன் கிளைகளில் நிறைய ரீங்காரச் சிட்டுகள் (humming bird) அமர்ந்துள்ளன. வெவ்வேறு நிறங்களுடைய ரீங்காரச் சிட்டுகளை மக்கள் பார்க்க வேண்டும் என்பதே இதனை உருவாக்கியவர்களின் நோக்கம். ஆனால், இந்த 222 ஆண்டுகளில் சிட்டுகளின் நிறங்கள் மறைந்துவிட்டன. ‘தேன் உண்பதற்காக பூக்களின் மீது வட்டமிடும்போது, தொடர்ந்து இறகுகளை அடிப்பதால் ரீங்காரச்சிட்டு என பெயர் சூட்டப்பட்டது. வெவ்வேறு தாவரங்களில் இருந்து தனக்கான உணவைச் சேகரிப்பதற்கு வசதியாக பல்வேறு வடிவங்களில் அதன் அலகுகள் உள்ளன’ எனும் குறிப்பை வாசித்தேன்.

கூடுகளின் அழகு

அனைத்துப் பறவைகளும் முட்டையிடுகின்றன. கோழி, குயில், காக்கா, சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவைகளின் முட்டைகளை நம்மில் சிலர் பார்த்திருப்போம். ஆனால், பறவைகள் முட்டையிடும் இடமும் முட்டையின் அளவும் பெருமளவில் வேறுபடுகின்றன. கூழாங்கற்களுக்கு இடையே ஆழமற்ற சிறு இடைவெளியில் தொடங்கி, சிக்கலாக நெய்யப்பட்ட குடுவைவரை பறவைக் கூடுகள் வடிவங்களிலும் அளவுகளிலும், கட்டுவதற்கான பொருட்களிலும் தனித்துவம் காட்டுகின்றன. வெவ்வெறு அளவில் உள்ள கூடுகளையும் முட்டைகளையும் பார்த்து ரசித்தேன்.

கூடுகளும் முட்டைகளும்

அடுத்ததாக, ‘உலகம் முழுக்க இருக்கும் பறவைகளில் எட்டில் ஒன்று ஆபத்தில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு அதன் மாதிரிகளை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு பறவைக்கு அருகிலும், பச்சை அல்லது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற செங்குத்துக் கோடு இருந்தது. பச்சை – பறவைக்கு ஆபத்து, ஆரஞ்சு – பறவை அருகிவருகிறது, சிவப்பு – பறவை மிக மோசமாக அருகிவருகிறது என்று அர்த்தம்.

கரையான் மேடுகள்

மில்லியன் கணக்கான சிறிய குருட்டுப் பூச்சிகள் ஒன்றிணைந்து கரையான் மேடுகளை உருவாக்குகின்றன. பிசுபிசுப்பான உமிழ்நீரைப் பசையாகப் பயன்படுத்தி, மண்ணைக் பிசைந்து உள் சுரங்கங்களையும் சிக்கலான அறைகளையும் உருவாக்குகின்றன. வெளிப்புறச் சுவர்கள் சூரியனால் கடுமையாகச் சுடப்பட்டு பெரிய கோட்டை உருவாகிறது. காட்சியகத்தின் முகப்பில், உயரமான கரையான் புற்று படம் இருந்தது. அதில், கரையான் புற்றுகள் 9 மீட்டர் உயரம்கூட வளரும், பூமிக்குக் கீழேயும் பல மீட்டர்கள் செல்லும் என்று அறிந்தேன். ஆப்பிரிக்காவில் உள்ள ஆளுயரத்தையும் தாண்டிய கரையான் புற்றுக்களைக் காட்சிக்கூடத்தில் பார்ந்து வியந்தேன்.

சிலந்தி

பெரும்பாலான சிலந்தி இனங்களின் அசைவுகளை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். மற்ற நுணுக்கமான விவரங்களைப் பார்க்க இயலாது. இங்கு அவை அனைத்தையும் பார்க்கலாம். சிலந்திகளுக்கு 4 ஜோடி கண்கள் வரை உண்டு. அவை, நகரும் பொருட்களின் திசையையும் வேகத்தையும் மட்டுமே கண்டறிய உதவுகின்றன. மேலும், வேட்டையாடும்போது பார்ப்பதைவிட உணர்தலையே பெரும்பாலான சிலந்திகள் நம்பியிருக்கின்றன. விதிவிலக்காக, நன்கு பார்வை தெரிகிற சிலந்திகளும் உள்ளன. உதாரணமாக, இரவும் பகலும் வேட்டையாடும் ஓநாய் சிலந்திகள் (Wolf Spiders).

சிலந்திகளின் தந்திரங்கள்

இரையைச் சிக்கவைப்பதற்கு நிறைய தந்திரங்களைச் சிலந்திகள் பின்பற்றுவதாகச் சொல்லி, 12 சிறு பெட்டிகளைச் சுவரில் வைத்திருக்கிறார்கள். விரும்புகிற பெட்டியை நாம் தொடலாம். தொட்டால், குறிப்பிட்ட சிலந்தி குறித்த விளக்கம் கிடைக்கும்.

மரத்தண்டுகள்

பழமையான 4 மரங்களின் புதைபடிவத்தைப் பார்த்தேன். இவற்றின் வயது, 385 மில்லியன் ஆண்டுகள், 310 மில்லியன் ஆண்டுகள், 150 மில்லியன் ஆண்டுகள், மற்றும் 23-56 மில்லியன் ஆண்டுகள். 4 வளிமண்டல மற்றும் தட்பவெப்ப நிலைகளில் வேறுபட்ட புவியியல் காலங்களில் (Devonian, Carboniferous, Jurassic and Paleogene) இருந்த இந்த மரங்கள், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது என்தை அறிய உதவுகின்றன. மில்லியன் ஆண்டுகளா என வியக்கலாம். ‘இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் புதைபடிவ தாவரங்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகள் என 3.5 பில்லியன் ஆண்டுகளின் வரலாறு உள்ளது’ என்கிறது ஒரு குறிப்பு.

டயனோசர்

டயனோசர்

பறவைகளின் மூதாதையர்களான டயனோசர்கள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன. அருங்காட்சியகத்தில், 122 -129 மில்லியன் ஆண்டுகள் பழமையான டயனோசர் ஒன்றைப் பார்த்தேன். பிரிட்டனில் முழுமையாகக் கிடைத்த டயனோசர்களில் மிக முக்கியமானது இது. முதலில், இக்வானோடன் (iguanodon) என்று இதை அழைத்தார்கள். புதைபடிவ ஆராய்ச்சியாளர் கிடியான் மாண்டல் (Gideon Mantell) நினைவாக, 2007-ல் மாண்டலிசாரஸ் (Mantellisaurus) என மாற்றினார்கள்.

அமெரிக்க மாஸ்டோடன்

அமெரிக்க மாஸ்டோடன் (Mastodon), 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வட அமெரிக்காவில் மனிதர்களுடன் இணக்கமாக வாழ்ந்திருக்கிறது. வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த விலங்குகள் அழிந்துவிட்டன. 30 ஆயிரம் – 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க மாஸ்டோடன் விலங்கை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். அமெரிக்க தொழிலதிபர் ஒருவர், மாஸ்டோடனுக்கு முதுகெலும்பு மற்றும் கிடைமட்ட தந்தங்களை செயற்கையாக இணைத்து, ‘நீர்வாழ் அரக்கன்’ என்று பெயரிட்டு பல பகுதிகளுக்கு எடுத்துச் சென்றார். அவரிடமிருந்து, அருங்காட்சியகத்தின் முதல் இயக்குநர் ரிச்சர்ட் ஓவன் 1884-ல் விலைக்கு வாங்கினார்.

அதிசயங்களுடன் தொடர்ந்து நடக்கிறேன்.

(பாதை விரியும்)

மேரி அன்னிங்

புதைபடிவப் பெண்

அருங்காட்சியகத்தில், ‘புதைபடிவப் பெண், மேரி அன்னிங்’ படம் இருந்தது. காட்சிக்கூடத்தில் இருக்கும் சில முக்கியமான புதைபடிவங்களைக் கண்டுபிடித்தவர் இவர். 47 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும், தன் வாழ்நாள் முழுவதும் புதைபடிவங்களைக் கண்டுபிடிப்பதிலேயே செலவிட்டவர். புதைபடிவச் சேகரிப்பாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

SCROLL FOR NEXT