அன்னை தெரசா
அன்னை தெரசா 
தொடர்கள்

இதே தேதி... முக்கியச் செய்தி: அன்னை தெரசா அவதரித்த தினம்!

சந்தனார்

1910 ஆகஸ்ட் 26-ல், மாசிடோனியாவின் ஸ்கோப்யே எனும் நகரில், அல்பேனியன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த ஆக்னஸ் கோன்ஸா போஜாக்ஸ்யு, எதிர்காலாத்தில் தன் அன்பால், அளவிட முடியாத அர்ப்பணிப்பால் உலகை ஆள்வார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பின்னாட்களில் பட்டினி, நோய், தனிமை என வாடிய கோடிக்கணக்கான உயிர்களை ஆக்னஸ் பேணிப் பாதுகாத்தார், ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தந்தார். ஆனால், தனது இளம் வயதில் அவரே ஏராளமான சோதனைகளை எதிர்கொண்டார். அவை அனைத்தும் மக்கள் சேவை எனும் மகத்தான தியாக உணர்வை நோக்கி அவரை உந்தித்தள்ளின.

ஆக்னஸ் 7 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை காலமானார். குடும்பம் தடுமாறியது. குழந்தைகளுக்குச் சரிவர உணவு கொடுக்க முடியாமல் தாய் தவித்தார். கடவுள்தான் கைகொடுப்பார் என நம்பியது குடும்பம். தேவாலயத்திலேயே பெரும்பாலும் நேரம் கழிந்தது ஆக்னஸுக்கு. ஒழுக்கம், அர்ப்பணிப்பு எனப் பல்வேறு உயர் குணங்களை வளர்த்துக்கொண்டார். அன்பின் உருவமாக உருக்கொண்டார். பதின்ம வயதில் சிறுமிகள் தங்கள் எதிர்காலம் குறித்த கனவுகளில் இருந்தபோது ஆக்னஸ், இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். அவர்தான் அன்னை தெரசா.

1928-ல் அயர்லாந்து சென்று, சிஸ்டர்ஸ் ஆஃப் லோரெட்டோ எனும் அமைப்பில் பயிற்சி பெற்றார். சில மாதங்கள்தான் அங்கு இருந்தார். பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்தார். தனது 17-வது வயதில், கொல்கத்தாவில் லோரெட்டோவின் புனித மேரி பள்ளியில் ஆசிரியையாகப் பணியைத் தொடங்கினார். இயல்பிலேயே சேவை மனப்பான்மை கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் ஏழைகளையும், நோயாளிகளையும் தேடிச் சென்று சேவைபுரியத் தொடங்கினார்.

மருத்துவமனைகளால் நிராகரிக்கப்படும் நோயாளிகளைக் கொண்டு சென்று மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தார். இதற்காக அவர் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். விரைவிலேயே தன்னார்வத் தொண்டர்கள் அவருடன் இணைந்துகொண்டனர். சேவை விரிவடைந்தது. 1950-ல் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அறக்கட்டளையைத் தொடங்கினார். அதன் கிளைகள் உலகமெங்கும் பரவின. தொழுநோயாளிகள் முதல் எய்ட்ஸ் நோயாளிகள் வரை, வறுமையால் வாடியவர்கள் முதல் வன்முறைகளால் தவித்தவர்கள் வரை ஏராளமானோருக்குச் சேவை செய்தார். நோபல் பரிசு, மகசேசே விருது என ஏராளமான அங்கீகாரங்கள் அவரை அலங்கரித்தன.

1997 செப்டம்பர் 5-ல் அன்னை தெரசா மறைந்தார். ஆனால், சேவை எனும் வரத்தைத் தனது அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்குக் கையளித்துவிட்டே அவர் காலமானார். அவர் இறந்தபோது, 123 நாடுகளில் கிளை பரப்பியிருக்கும் ஒரு மாபெரும் சேவை நிறுவனத்தை அவர் உருவாக்கியிருந்தார்.

இத்தனை சேவைகளுக்கு மத்தியிலும் அவரது செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டன. ஊழல்வாதிகள், சமூகவிரோதிகள், சர்வாதிகாரிகள் என யார் நிதி கொடுத்தாலும், ரிஷிமூலம் பார்க்காமல் வாங்கினார் என்பது அவர் மீதான விமர்சனங்களில் ஒன்று. அந்தத் தருணங்களில் அவரது பதில் இதுதான். “எனது பணி மக்களுக்கு அமைதியை வழங்குவதுதான். அதற்காகப் பணம் பெறுவதை நிறுத்த மாட்டேன்.”

மதமாற்றம் தொடர்பான புகார்களையும் அன்னை தெரசா எதிர்கொண்டார். அன்னை தெரசாவின் சுயசரிதையை எழுதிய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அன்னை சொன்னார்: “ஆம், நான் மதம் மாற்றுகிறேன். உங்களை ஒரு சிறந்த இந்துவாக்குகிறேன். ஒரு சிறந்த முஸ்லிமாக, சிறந்த ப்ராட்டஸ்டன்டாக, சிறந்த சீக்கியராக மாற்றுகிறேன். கடவுகளை நீங்கள் கண்டடைந்துவிட்டால், அதன் பின்னர் அவருக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.”

அன்னை தெரசாவின் பிறந்தநாளில் அவரது சேவையைப் போற்றுவோம். நம்மால் முடிந்த சேவையைப் பிறருக்குச் செய்வோம்!

SCROLL FOR NEXT