ஓங்கி உயர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள்
ஓங்கி உயர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள்  
மண்டலம்

`அதிகாரிகள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை'- கொந்தளிக்கும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள்

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழகம் உள்ளது. இங்கு பணிசெய்யும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகோரி கடந்த 115 நாள்களாக குரல் எழுப்பிவருகின்றனர். மாவட்ட அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்க அறிவுறுத்திய பின்பும்கூட தங்கள் கோரிக்கை நிறைவேறாததால் சோகத்தின் விளிம்பில் உள்ளனர் அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள். இதனால் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்திலும் குதித்தனர்.

ரப்பர் பால்

இதுகுறித்து ரப்பர் கழகத் தொழிலாளர்கள் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “கீரிப்பாறையில் அரசுக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்கிறோம். தினமும் 7000 ரூபாய் மதிப்பிலான ரப்பர் பாலை சேகரித்து அரசுக்குக் கொடுக்கிறோம். ஆனால் நாள் ஒன்றுக்கு 480 ரூபாய் தான் அரசு ஊதியம் தருகிறது. எங்கள் ஊதிய உயர்வு கோரிக்கைக்காக பலகட்ட போராட்டங்களும் நடத்தினோம். மாவட்ட அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எங்கள் கோரிக்கைக்கு எல்லாம் சம்மதித்து ரப்பர் கழக அதிகாரிகளும் உடன்பட்டனர். ஆனால் அது நடந்து 115 நாள்கள் ஆகியும் இதுவரை அதிகாரிகள் துரும்பைக் கூடக் கிள்ளிப்போடவில்லை.

மனோதங்கராஜ் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் தினசரி 40 ரூபாய் ஊதிய உயர்வு என நிர்வாகத்தரப்பு ஒத்துக்கொண்டதால் தான் முந்தைய போராட்டத்தைக் கைவிட்டோம். இப்போதும் இதை வழங்காதது எங்களைமட்டுமல்ல, பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சரையும் கொச்சைப்படுத்தும் செயல்! ரப்பர் தோட்டத்தில் பால் எடுப்பது விஷப்பூச்சிகள், பாம்புகள், வனவிலங்குகள், தொற்றைப் பரப்பும் கொசுக்கள் இவைகளுக்கு மத்தியில் செய்யப்படும் சவாலான பணி. அதை ரப்பர் கழகம் மதிக்கவில்லை.

இதேபோல் அரசு ரப்பர் கழகத்தின் தொழில்கூடத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஏராளமான வேதிப்பொருள்களை பயன்படுத்தி வேலை செய்வதால் எளிதில் நோய் தொற்றுக்கும் உள்ளாகிறார்கள். வேதிப்பொருள்களின் மேல் ஏறிநின்று செய்யும் வேலையால் பல தொழிலாளர்களின் கால்களில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகிவிடுகிறது. அதற்கான சிகிச்சைக்கு அரசு ரப்பர் கழக தோட்ட மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு மருத்துவர் இருப்பது இல்லை. தேவையான மருந்துகளும் இருப்பில் இல்லை. எங்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்தும் அதையும் நிறைவேற்றவில்லை’’ என பட்டியல் போடுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் மிக முக்கியமான வருவாய் ஈட்டும் தளமாக இருப்பது ரப்பர். அதிலும் அரசு ரப்பர் கழகத்தில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் பலகோடி ரூபாய் வருவாய் வருகிறது. குமரியில் தாராளமாக விளையும் ரப்பர் சேகரிக்கப்பட்டு கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள ரப்பர் வாரியத்திற்குச் செல்கிறது. அதற்கு மாற்றாக குமரி மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான அரசு ரப்பர் தொழிற்சாலை இங்கே அமையப்பெற்றால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதோடு, அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். தொழிலாளர்களையும் வளமாகவே கவனித்துக்கொள்ள முடியும். முன்வருமா அரசு?

SCROLL FOR NEXT