தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள்
தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள் 
மண்டலம்

ராமேஸ்வரம் வந்த 3 இலங்கைத் தமிழர்கள்: 83 ஆக உயர்ந்த அகதிகள் எண்ணிக்கை!

காமதேனு

இலங்கையில் இருந்து கடல் வழியாக இன்று அதிகாலை 3 பேர் அகதிகளாக தமிழகம் வந்ததை அடுத்து அகதிகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையும், மருந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலையும் சரசரவென உயர்ந்து வருகிறது. இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சக்களின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டிய மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவி புரிந்து வருகிறது. இருந்தாலும்கூட அங்கு தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அங்கு பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் உள்ள தமிழர்கள் கடல் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். இவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இலங்கை தலைநகர் கொழும்பை சேர்ந்த பெண், சிறுவர், இளைஞர் என மூவர் இன்று அதிகாலை 4 மணியளவில் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். மூன்று பேரும் படகில் தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோயில் கடற்கரைக்கு வந்தனர். இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு, பிறகு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அகதிகளாக பதிவு செய்யப்பட உள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மே மாதம் முதல் அந்நாட்டில் இருந்து மக்கள் தமிழகம் வர தொடங்கினர். இதுவரை 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் அகதிகளாக பதிவு செய்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 3 பேர் வந்துள்ளதால் அகதிகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT