நாகர்கோவிலில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை
நாகர்கோவிலில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை  
மண்டலம்

வெடித்த போராட்டம்... மீண்டும் கலைவாணர் பெயர்: முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு

காமதேனு

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரைச் சூட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்துவந்தன. இந்நிலையில் நேற்று இரவு இந்த புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் அரங்கம் என்றே பெயர் சூட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடம்

தன் நகைச்சுவைகள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்.எஸ்.கே. நாஞ்சில் சுடலையாண்டி கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. 49 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் தன் படங்களின் மூலம் சமூக மறுமலர்ச்சிக்கான விசயங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தார். எம்.ஜி.ஆரால், என்.எஸ்.கிருஷ்ணனின் மறைவுக்குப் பின்பு, நாகர்கோவில் மணிமேடை பகுதியில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியின் கீழ் இயங்கும் வகையில் கலைவாணர் அரங்கமும் கட்டப்பட்டது. இதன்மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் வந்தது.

இந்நிலையில் முந்தைய அதிமுக ஆட்சியில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி வசம் இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 90 சதவீத பணிகள் இப்போது முடிந்திருக்கும் நிலையில் கலைவாணர் அரங்கத்தை இடித்துக் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய கட்டிடத்திற்கு, கலைஞர் மாளிகை எனப் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திரக் கூட்டத்தில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக வரும் 2-ம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் முடிவுசெய்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

நாகர்கோவிலில் நடந்த போராட்டம்

இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக என்.எஸ்.கிருஷ்ணனின் சமூகத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். நாகர்கோவில் வடசேரி பகுதியில் நூற்றுக்கணக்கான மக்களும், இளைஞர்களும் போராட்டக் களத்திற்கு வந்தது திமுக தலைமையை பெரிதும் யோசிக்க வைத்தது. சமூகவலைதளங்களிலும், போஸ்டர்களிலும் அரசை கடுமையாக விமர்சித்தும் தகவல்கள் பரவின. பாஜக குமரி மாவட்டத் தலைவர் தர்மராஜூம் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகர்கோவில் மாநகராட்சியில் பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்திற்கு பெயரிடுவதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. இக்கட்டிடம் ஏற்கெனவே இருந்தவாறே, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரிலேயே அழைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT