சப்பரத்தை பார்வையிடும் அமைச்சர் அன்பில் மகேஷ்
சப்பரத்தை பார்வையிடும் அமைச்சர் அன்பில் மகேஷ்  
மண்டலம்

`மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறோம்; முதல்வர் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்'

கரு.முத்து

``தஞ்சாவூர் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தில் மக்களுக்கு தேவையான உடனடி பணிகளை விரைவுபடுத்த தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர்.

களிமேடு கிராமத்திற்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. காலை 5 மணிக்கு தமிழக முதல்வர் உடனடியாக எங்களையும், அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் பற்றி கேள்விபட்டவுடன் தமிழக முதல்வர் மனசு தாங்காமல் எங்களை முன்னே செல்லுமாறு கூறிவிட்டு அவர் பின்னே வந்து கொண்டிருக்கிறார். நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்து விட்டது. இதில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை தமிழக முதல்வர் நிச்சயம் செய்வார். முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வில்லை என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் குற்றச்சாட்டுகளாக பார்க்கவில்லை. இன்னும் அதிகக் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

இதில் அரசியல் செய்யக்கூடாது. இதை மிகப்பெரிய இழப்பாக நாங்கள் பார்க்கின்றோம். இந்த சம்பவத்தால் தமிழக முதல்வர் மிகவும் மனவேதனையுடன் இருக்கிறார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மக்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்படும்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT