மருத்துவ சிகிச்சையில் த.பாலசுப்பிரமணியன்
மருத்துவ சிகிச்சையில் த.பாலசுப்பிரமணியன் 
மண்டலம்

சிறைக்கு அனுப்ப தயாரானது போலீஸ்... திடீர் பாதிப்பால் மருத்துவமனையில் தலைவர் அனுமதி

என்.சுவாமிநாதன்

இந்துமதத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்துவரும் அகில பாரத இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் இன்று கைது செய்யப்பட்டார். அவரை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகளை போலீஸார் தொடங்கிய நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் தா.பாலசுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து இயக்கத்தினர் பலரும் அங்கு குவிந்துவருவதால் பதற்றம் நிலவிவருகிறது.

அகில பாரத இந்து மகாசபாவின் தமிழகத் தலைவராக இருப்பவர் த.பாலசுப்பிரமணியன். அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது இந்த அமைப்புதான். ஆனால் தீர்ப்பின் வெற்றியை பாஜகவே உரிமை கொண்டாடிவிட்டதாக தொடர்ந்து பாஜகவை விமர்சிப்பதோடு, பாஜகவுக்கு எதிராக இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைத்து தேர்தலையும் அகில பாரத் இந்து மகாசபா சந்தித்து வருகின்றது. தொடர்ந்து மத ரீதியாக இயங்கிவருவதால் த.பாலசுப்பிரமணியனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் உண்டு.

இந்நிலையில் இந்து மகாசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி காவல்நிலைய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்த அவரது வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 17-ம் தேதி, குமரிமாவட்டம் காப்புக்காடு பகுதியில் நிர்வாகிகள் கூட்டத்தில் த.பாலசுப்பிரமணியன் மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தக்கலை டி.எஸ்.பி கணேசன், புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் அவரைக் கைதுசெய்தனர். இந்நிலையில் இந்து மகாசபா மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறைக்கு அனுப்பும்முன்பு மருத்துவப் பரிசோதனை செய்ததிலும் அவருக்கு உடல்நலகுறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தா.பாலசுப்பிரமணியன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துத் தகவல் பரவியதும் குமரிமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அகில பாரத இந்துமகாசபா நிர்வாகிகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டுவருகின்றனர். இதனால் மருத்துவமனையில் கூடுதல் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT