உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை  hindu கோப்பு படம்
மண்டலம்

தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!

காமதேனு

தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்த முருகானந்தம்- கனிமொழி தம்பதியின் மகள் லாவண்யா (17). இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

இதனை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும், இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்துதான் விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோவும் வெளியானது.

இதனிடையே, "மதம் சார்பான பிரசாரங்கள் பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது" என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

இதனிடையே, தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மாணவி லாவணாயாவின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாணவி லாவண்யாவின் பெற்றோர் தரப்பு, தமிழ்நாடு அரசு தரப்பு, பள்ளி தரப்பு உள்பட பல்வேறு தரப்பு வாதங்களும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார் நீதிபதி சுவாமிநாதன்.

இந்த வழக்கு விசாரணைக்காக இன்று பட்டியலிடப்படாத நிலையில், அவசர வழக்காக எடுத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT