குளிக்க ஆள் இல்லாத நிலையில் திற்பரப்பு அருவி
குளிக்க ஆள் இல்லாத நிலையில் திற்பரப்பு அருவி  
மண்டலம்

திற்பரப்பு அருவிக்கு போகாதீங்க: அபாய அளவைத் தாண்டி கொட்டுகிறது தண்ணீர்!

காமதேனு

திற்பரப்பு அருவியில் அதிகவேகத்தில் தண்ணீர் சீற்றத்துடன் பாய்ந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கேரளத்தில் பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக அதை ஒட்டியிருக்கும் குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்ட விவசாயத்தின் ஜீவாதாரமான பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளும் வேகமாக நிரம்பிவருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து மறுகால் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இப்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா காலம் என்பதால் வீட்டிலேயே முடங்கி இருந்ததாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வருகின்றனர். அவர்கள் திற்பரப்பு அருவியிலும் உற்சாகக் குளியல் போட்டு மகிழ்ந்துவந்தனர். இந்நிலையில் பேசிப்பாறை அணையில் அதிகளவு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் அபாய அளவைத் தாண்டியும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

பேச்சிப்பாறை அணை மொத்தம் 48 அடி கொள்ளளவு கொண்டது. தொடர்மழையினால் அணை 45 அடி நீர்மட்டத்தைத் தாண்டியதால் வினாடிக்கு 950 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து தண்ணீர் வரும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதனாலேயே திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

SCROLL FOR NEXT