அரசுப் பேருந்து ஓட்டுனர்
அரசுப் பேருந்து ஓட்டுனர் hindu கோப்பு படம்
மண்டலம்

`கலெக்சன் இல்லையேன்னு பேருந்தை நிறுத்திட்டாங்க'

என்.சுவாமிநாதன்

நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்திற்குட்பட்ட கக்கன் புதூர் கிராமத்திற்கு பேருந்து வசதி தேவை என கோரிக்கை எழுந்துள்ளது. இந்தப்பகுதியில் ஏற்கெனவே இயங்கிவந்த அரசுப்பேருந்து முந்தைய ஆட்சியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் இரண்டுகிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் சூழல் எழுந்துள்ளது.

நரேஷ்

இதுகுறித்து பறக்கை வார்டு உறுப்பினர் நரேஷ் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ‘நாகர்கோவிலில் இருந்து காடேற்றிக்கு தடம் எண் 50 என்ற அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து கக்கன்புதூர் மற்றும் காடேற்றி கிராமங்களை நாகர்கோவிலோடு இணைக்கும்வகையில் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தினை நாகர்கோவிலில் படிக்கும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். தினசரி 4 முறை இந்தப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து இல்லாததால் கக்கன்புதூர் கிராம மக்களும், காடேற்றி கிராம மக்களும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்துபோய் அருகாமை கிராமங்களில் பேருந்து ஏறவேண்டிய சூழல் உள்ளது. அதிலும் இந்தப் பாதையும் குளங்கள் சூழ்ந்தவை. இதனால் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும்போது விஷ ஜந்துக்களின் தொல்லையும் அதிகளவில் இருக்கும்.

முந்தைய அதிமுக ஆட்சியில் இப்படியான கிராமத்திற்கு பேருந்து வசதி செய்துக் கொடுப்பதை சேவை என்னும் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கலெக்சன் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகியதால் போதிய வருவாய் இல்லை என திடீரென இந்தப் பேருந்தை நிறுத்திவிட்டனர். இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்தோர் உரிய பேருந்து வசதி இன்றி தவித்து வருகின்றனர். இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT