அமைச்சர் சாமிநாதன் மரியாதை...
அமைச்சர் சாமிநாதன் மரியாதை... 
மண்டலம்

திருப்பூர் ரயில் நிலையத்துக்கு கொடிகாத்த குமரனின் பெயரைச் சூட்டுக!

இரா.கார்த்திகேயன்

சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழகத்தின் வீரத்தை வெளிக்காட்டிய ஊர் திருப்பூர். ‘கொடி காத்த குமரன்’ எனும் போதே, குண்டாந்தடியால் தாக்கப்பட்ட வரலாற்று நினைவுகள் நெஞ்சில் பீறிட்டு எழும். அந்த வகையில் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள குமரன் பூங்கா, இந்திய சுதந்திர வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையது!

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள செ.மேலப்பாளையம் என்ற சிற்றூரில், 1904-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் குமரன். குடும்பச்சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்பநிலையிலேயே முடித்துக் கொண்டவர், கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தனது 19-ம் வயதில் ராமாயம்மாளை திருமணம் செய்தவர், பிறகு பிழைப்புக்காக திருப்பூர் வந்தார். சுதந்திர வேட்கையில் பற்று கொண்ட அவர், காந்தியடிகள் கொள்கைமீது தீவிரப் பற்று வைத்து அதை பின்பற்றி நடந்தார். காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் குமரன் முதல் ஆளாகப் பங்கெடுத்தார்.

1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தின் காரணமாக தமிழகத்தில் அறப்போராட்டம் நடந்தது. அதே ஆண்டு ஜனவரி 10-ம் தேதி கையில் தேசியக் கொடியை ஏந்தி, தொண்டர் படைக்கு தலைமை ஏற்றுச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்ட குமரன், தலையில் பலத்த காயமடைந்து கீழே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஒல்லியான தனது தேகத்தை சிதைக்கும் வகையில் கடுமையாக காவலர்களால் தாக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்த போதிலும், தேசியக் கொடியை கீழேவிடாத நெஞ்சுறுதியுடன் இருந்தார் குமரன். அதனால்தான் அவர், நம் நெஞ்சங்களில் இன்றும் பட்டொளி வீசிப் பறக்கிறார்!

அந்தக் கொடிகாத்த குமரனின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு நினைவு அஞ்சல் தலை மத்திய அரசால் 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு, குமரன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பித்தார்.

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வடக்கு காவல் நிலையம் எதிரில், அவர் அடிபட்டு விழுந்த இடத்தில் நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்பது குமரனின் வாரிசுகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. “எங்கள் கொள்ளுத் தாத்தா கொடிகாத்த குமரன் காயம்பட்டு விழுந்த இடத்தை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாகப் போட்டு வைத்திருப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது. அந்த இடத்தில் சிறிய அளவில் நினைவு வளைவு மற்றும் மண்டபம் போன்று அமைத்துத் தந்தால், தேச விடுலைக்காகப் போராடிய அவருக்கு உரிய சிறப்புச் செய்ததாக இருக்கும்” என்கிறார் குமரனின் கொள்ளுப்பேரன் நிர்மல்ராஜ்.

திருப்பூர் குமரன் குடும்பத்தைச் சேர்ந்த சிவானந்தம் நம்மிடம் பேசுகையில், “சென்னிமலை அருகே உள்ள குமரனின் சிற்றூர் வீட்டையும் பாரமரிக்க வேண்டும். அதேபோல் அவர் காயம்பட்ட இடத்தில் நினைவு வளைவு அமைக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, திருப்பூர் ரயில் நிலையத்துக்கு திருப்பூர் குமரன் பெயரைச் சூட்ட வேண்டும்” என்றார்.

தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குமரன் நினைவகத்தில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தபோது, “குமரன் குடும்பத்தினரின் கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT