மண்டலம்

விபத்தில் பறிபோன அம்மாவின் உயிர்... மரணத்தை மறைத்த தந்தை: பொதுத்தேர்வு எழுதிவிட்டு வந்த மகள்கள் கண்ணீர்

காமதேனு

விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில் மகள்கள் இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்ததும் தன் அம்மாவின் உடலுக்கு கதறியழுதபடி அந்த மாணவிகள் அஞ்சலி செலுத்தியக் காட்சி பார்ப்போரை கண்கலங்கவைத்தது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காந்திநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. தனியார் காஸ் ஏஜென்ஸி ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இந்தத் தம்பதிக்கு வாணிஸ்வரி, கலாராணி என இருமகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இப்போது பொதுத்தேர்வு நடப்பதால் மாணவிகள் இருவரும் தேர்வு எழுத சென்றிருந்தனர்.

வழக்கம்போல் முத்துமாரி, மகள்கள் பள்ளிக்குச் சென்றதும் தன் வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். ஆடுகளை கழுகுமலை பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அருகே மேய்த்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று முத்துமாரி மீது மோதியது. இதில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ஆடு ஒன்றும் உயிர் இழந்தது. உடனடியாக முத்துமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மகள்கள் வாணிஸ்வரி, கலாராணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத் தேர்வு இருந்ததால் பெரியசாமி தன் மனைவி இறந்த விசயத்தை மகள்களிடம் தேர்வெழுதிவிட்டு வரும்வரை சொல்லவில்லை. பள்ளிக்குச் சென்ற மாணவிகளுக்கு இந்த விசயம் தெரியவேண்டாம் என உறவினர்களுக்கும் தடைபோட்டார்.

தாயின் உடல் பிரேத பரிசோதனைக்கூடத்தில் இருப்பதே தெரியாமல், சகோதரிகள் இருவரும் நடுவக்குறிச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு தேர்வெழுதினர். தேர்வெழுதிவிட்டு வந்ததும், தன் தாய் முத்துமாரி இறந்த விசயம் தெரிந்து சகோதரிகள் கதறி அழுதது காண்போரை கண் கலங்கவைத்தது. அதேநேரம் தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து தந்தை பெரியசாமி செய்த செயல் அனைவரையும் நெகிழச் செய்தது.

SCROLL FOR NEXT