மண்டலம்

குட்கா வழக்கில் தலைமறைவானவர் முன்ஜாமீன் பெறும் வரை காத்திருப்பதா?

கி.மகாராஜன்

குட்கா வழக்கில் தலைமறைவாக இருப்பவர் முன்ஜாமீன் பெறும் வரை காத்திருப்பதா? என வத்தலகுண்டு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்றதாக அஜ்மல்கான் உட்பட இருவர் மீது வத்தலகுண்டு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அஜ்மல்கான் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அஜ்மல்கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில், "குட்கா, புகையிலை 13.5.2022-ல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல் எதிரி கைது செய்யப்பட்டுள்ளார். மனுதாரர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் முன்ஜாமீன் பெறுவதற்காக போலீஸார் காத்திருக்கிறார்கள். போலீஸாரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் வழக்கு விசாரணையை வேறு காவல் நிலையம் அல்லது பணியில் சிறப்பாக செயல்படும் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT