மண்டலம்

பற்றி எரிந்த மாநகராட்சி பள்ளி... உயிர் தப்பிய மாணவர்கள்

காமதேனு

சென்னை மாநகராட்சி பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர். 25க்கும் மேற்பட்ட மாணவர்களின் புத்தக பை தீயில் எரிந்து நாசமானது. ஆசிரியர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்களது புத்தக பையை வைத்து விட்டு பிரேயருக்காக அனைவரும் கீழே ஒன்று கூடினர். அப்போது இரண்டாவது மாடியிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை கண்ட ஆசிரியர்கள் உடனே மேலே சென்று பார்த்தபோது மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இரண்டாவது மாடியில் மின்சார பெட்டி அருகே உள்ள படிக்கட்டில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் வைத்திருந்த புத்தகப் பைகள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த ஆசிரியர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் மற்றும் தீயணைப்பான்கள் கருவிகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற ஆசிரியர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அங்கு வந்த அரும்பாக்கம் தீயணைப்பு படையினர், ஆசிரியர்கள் முயற்சியால் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவர்களிடம் இதுபோன்ற தீ விபத்தின் போது கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்து காண்பித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ராமசந்திரன் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டியதுடன், மாணவர்கள் தீ விபத்தின் போது எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கினார். அதுமட்டுமன்றி தீ விபத்தில் புத்தகம் மற்றும் பைகளை இழந்த மாணவர்களுக்கு புதிதாக புத்தகப் பைகள் வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் அரும்பாக்கம் மாநகராட்சி பள்ளியை போன்று, மற்ற பள்ளிகளும் இதுபோன்று தீ விபத்து நிகழும்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தீ விபத்து குறித்து பேசிய தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாது, உடனடியாக ஆசிரியர்களுடன் சேர்ந்து தீயை அணைத்ததாகவும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, புத்தகம், பை உள்ளிட்ட பொருட்களை இழந்த மாணவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT