மண்டலம்

14 லட்சத்தை ஏமாற்றியதால் முதியவர் தீக்குளிப்பு: தலைமைச் செயலக வாயிலில் நடந்த சோகம்

ரஜினி

தலைமைச் செயலக வாயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை முதியவர் ஒருவர் திடீரென உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். முதியவரின் உடலில் தீ பற்றி எரிவதை பார்த்து பொதுமக்கள் கூச்சலிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஓடி வந்து முதியவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் கோட்டை காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, முதியவர் வைத்திருந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது புகார் கடிதங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற நபர், திருவள்ளுவர் மாவட்டம், திருவலங்காடு தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (75) என்பது தெரியவந்தது. பொன்னுசாமி சென்னை முகலிவாக்கம் விஜிஎன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு வட்டியில்லாமல் 14 லட்ச ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சுப்பிரமணி குறிப்பிட்டதுபோல் இன்று வரை வாங்கிய பணத்தை திருப்பிதரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த பொன்னுசாமி இது குறித்து திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

ஆனால், பொன்னுசாமி புகார் மீது இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன அழுத்ததிற்கு ஆளான பொன்னுசாமி இன்று காலை தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அங்கு அதிகாரிகள் அவரிடம் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பொன்னுசாமி தலைமைச் செயலக வாயில் அருகே தீக் குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் கோட்டை காவல் துறையினர் பொன்னுசாமி பையில் இருந்த புகார் மனுக்களை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலக வாயிலில் முதியவர் ஒருவர் தீக் குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT