மண்டலம்

மக்களை ஓட ஓட வெட்டிய கும்பல்... 3 மணி நேரம் களேபரம்... பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

காமதேனு

பொதுமக்களை ஓட ஓடவிரட்டி கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரூடி காலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீட்டில் ஒன்றில் வாடகைக்கு இருந்த நெல்லையை சேர்ந்த சிவா என்பவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால், தனது நண்பர்களான நெல்லையை சேர்ந்த ஹரிஹரன், முத்துவேல், சங்கர், ராஜா, முருகன் ஆகியோரை வீட்டிற்கு அழைத்துள்ளார். இரவு முழுவதும் மது அருந்தியதோடு, கஞ்சா பயன்படுத்தி போதையில் கூச்சலிட்டபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார்.

இதனிடையே சிவா நெல்லைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அவரது நண்பர்கள், நேற்று மதியம் 2 மணியளவில் அரிவாள், கத்தி கம்புகளுடன் வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரத்தையும், அவரது மனைவி பூர்ணிமா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் ஷ்யாம் என்பவரை இந்த கும்பல் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளது. இதில் அவரும் படுகாயமடைந்தார். போதை தலைக்கேறிய நிலையில், அரிவாளுடன் சாலையில் சுற்றிய 5 பேரும் அங்கிருந்த பொதுமக்களையும் மிரட்டியதோடு, சாலையில் வந்து கொண்டிருந்த அபி, சசி, பிருந்தா, தர்ணிகா உள்ளிட்டவர்களையும் தாக்கினர். இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமி என்பவரை தாக்கியதுடன், அவரை அரிவாளால் போதை ஆசாமிகள் துரத்தியுள்ளனர். அப்போது, வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டதால் அவர் உயிர் தப்பினார். அதே நேரத்தில், அந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கார், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் போதை கும்பலை மடக்கிப்பிடித்தனர். 3 மணிநேரம் நடந்த இந்த களேபரத்தால் கும்பலை சேர்ந்த 5 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT