கோப்பு படம்
கோப்பு படம் 
மண்டலம்

மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு நடந்த சோகம்!

காமதேனு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழாவில் மீன்பிடிக்கச் சென்ற கல்லூரி மாணவர் சேற்றில் சிக்கி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராலிமலை அருகே உள்ள எழுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவரது மகன் தங்கவேல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று எழும்வம்பட்டி அருகே உள்ள கல்குடி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் மாணவர் தங்கவேல், அவரது தந்தை முருகன் ஆகியோரும் ஆர்வமாக பங்கேற்றனர். கிராம மக்கள் மற்றவர்களுடன் இணைந்து குளத்தில் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது குளத்தின் மத்தியில் உள்ள ஆழமான பகுதியில் தங்கவேலின் கால் சேற்றில் சிக்கிக் கொண்டது. அதிலிருந்து காலை எடுத்து விட்டு தண்ணீருக்கு மேல் வர முடியாமல் திணறினார். அதனைக்கேட்ட கிராமத்து இளைஞர்கள் தண்ணீரில் தங்கவேலைத் தேடினர். அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் விராலிமலை போலீஸார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிராம மக்களின் வெகு உற்சாக கொண்டாட்டமான மீன்பிடித் திருவிழா எழுவம்பட்டி கிராமத்திற்கு மட்டும் சோகமாகிப்போனது.

SCROLL FOR NEXT