ஆட்சியரிடம் முறையிடும் பச்சைத் தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்
ஆட்சியரிடம் முறையிடும் பச்சைத் தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்  
மண்டலம்

`நிலமே இல்லை, ஆனால் அவர்கள் பயனாளி'- குமரியில் பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு

காமதேனு

சுப.உதயகுமாரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் பச்சை தமிழகம் கட்சியானது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமை வீடு திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் குமரிமாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ”குமரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் நிலம் உள்ள ஏழை மக்களுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகமே பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி அளித்துவந்தது. தற்போது இந்தத் திட்டம் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - பி.எம்.ஏ.ஒய் (U)) ன் கீழ் இணைக்கப்பட்டு முழுமையாக தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் வாழும் மக்களுக்கு ரூ.2.75 லட்சமும், நகர்ப்புற பகுதியில் வாழ்பவர்களுக்கு ரூ.2.10 லட்சமும் இலவசமாக வீடு கட்டுவதற்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் குமரி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ரத்து செய்யப்பட்ட மற்றும் போலி பட்டா உடையவர்களையும் பயனாளிகளாக தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளது.

உதாரணமாக குமரிமாவட்டத்தின், கண்ணு பொத்தை காலனி பகுதியில் கடந்த 1997-ம் ஆண்டு, 100 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் பயன் பெற்ற பயனாளிகள் பலருக்கும் சொந்த வீடு உள்ள நிலையில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் எவரும் குடியிருக்க முன்வரவில்லை. இதனால் ஆதிதிராவிடர் நலத்துறை இவர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்தது. வேறு நபர்களுக்கு இப்பகுதியில் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்ட நபர்களும், இடம் ரத்து செய்யப்பட்ட நபர்களும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டி அதனை விற்பனை செய்யும் நோக்கத்தில் அதிகாரிகளை சரிகட்டி இத்திட்டத்தில் இணைந்து உள்ளதால் உண்மையிலேயே தகுதி உள்ள நபர்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது போலவே ஏனைய பகுதிகளிலும் பயனாளிகள் தேர்வு செய்ததில் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளது. இதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்’’ என்றார்.

இதனிடையே இவ்விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தரவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT