அரசியல்

ஏன், இவ்வளவு பதற்றம்... திருமாவளவன் அவர்களே?

க.ப.மாரிக்குமார்

‘கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில் பேரம் பேசினாரா திருமாவளவன்?: மீண்டெழுந்த சர்ச்சையும், வேகமடையும் விவாதங்களும்’, என்கிற தலைப்பில் காமதேனு இணைய இதழில் வெளியான கட்டுரையை நானும் படித்தேன். அந்தக் கட்டுரை தொடர்பாக என்னுள் கிளறிவிட்ட சிந்தனைகளை, உண்மைகளை, கேள்விகளை காமதேனு வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற வேட்கையே இந்தக் கட்டுரை.

நாட்டு மிராண்டிகள்!

18 ஆண்டுகளுக்கு முன் 2003-ல் நடந்த ‘கண்ணகி – முருகேசன்’ படுகொலையானது, மனிதகுல வரலாறு இருக்கும்வரை மன்னிக்கவே முடியாத ஒரு ‘நாட்டுமிராண்டி’களின் படுபாதக செயல். (கொலைகாரர்களை ‘காட்டு மிராண்டிகள்’ என்று சொல்வது வனவாசிகளை நாம் அவமானப்படுத்துவதாகும். ‘காட்டு மிராண்டி’களின் வாழ்வில் நிறையவே அறமும், ஈரமும் இருக்கின்றன). இவ்வழக்கில் தீர்ப்பளித்திருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். உத்தமராஜ் அவர்கள் கூறியிருப்பதுபோல, “இது போன்ற கவுரவ கொலைகளில் கவுரவம் எங்கிருக்கிறது?”. இதை ‘ஆணவக் கொலை’ என்றுகூட சொல்வதைத் தவிர்த்து, இன்னமும் சாதியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரியும் ‘மனநோயாளிகளின் வெறியாட்டம்’ என்று சொல்வதே சரியாகும்.

விடிய விடிய 300-க்கும் மேற்பட்ட சாட்சிகள் கண்ணெதிரே நடந்த இந்தக் கொடூரத்தை தடுக்க காவல் துறையும் முன்வராத பட்சத்தில், ஊடகத்தின் வாயிலாக இந்தக் கொடுமையை உலகறியச் செய்தது விசிகவும் அதன் தலைவர் திருமாவளவனும்தான். இதை எப்பொழுதும் மானுடம் பக்கம் நின்று உண்மைகளை உரக்கச் சொல்லும் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், அதற்கடுத்து நடந்தது என்ன என்பதை பேசுகிறபொழுது... விசிகவினருக்கு கோபம் வருவதில்தான் அவர்கள் முழு அரசியல்வாதிகளாக ஆகியிருப்பதை காட்டுகிறது. அது சரி, ‘அரசியலில் இருந்துகொண்டு எந்நேரமும் அறம்பாடச் சொன்னால் எப்படி?’, என்பதுதானே உங்கள் கேள்வி.

பாதை தவறிய பயணம்

“ஆர்எஸ்எஸ், பாஜக எழுச்சி பெற்றுவரும் இந்தக் காலகட்டத்தில் அதை எதிர்க்கிற விசிக பற்றி இப்படி அவதூறு பரப்புவது நல்லதல்ல", என்று விசிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசியிருக்கிறார் சகோதரர் 'எவிடன்ஸ்' கதிர். திருமா எப்படி தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு திமுகவையும், திராவிடத்தையும் ஆதாரிப்பாரோ, அப்படி விசிக மற்றும் அதன் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களோடு புகார்களாக வந்தாலும், விசிகவையும் அதன் தலைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர் கதிர். அதனால்தான் விசிக மீது யார் எந்தவொரு குற்றச்சாட்டு வைத்தாலும், அது வெறும் அவதூறாகிப்போகிறது அவருக்கு.

90-களின் தொடக்கத்தில் மதுரை அவனியாபுரம் மலைச்சாமியின் ‘தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா’ காலம் தொடங்கி, திருமாவளவன் தலையெடுத்து இவர்கள் தேர்தல் ஜனநாயகத்தை தவிர்த்த ’விடுதலை சிறுத்தைகள்’ஆகி, பின்னர் மறைந்த பெரியவர் அய்யா மூப்பனாரின் அரவணைப்பில் அரசியல் கட்சியாகி உருமாறி தேர்தலில் பங்கெடுக்க தொடங்கிய காலம் முதல், சிறுத்தைகளின் சாதி ஒழிப்பு தமிழ் தேசிய அரசியலை உற்று கவனித்து வரும் பலரில் நானும் ஒருவன்.

அந்தக் கவனிப்பின் வாயிலாக, சிறுத்தைகள் மீதும், சமூக நீதியின் மீதும் அக்கறையோடு நாம் சொல்கின்ற பேருண்மை இதுதான்: சிறுத்தைகளே! நீங்கள் இயக்கமாக உருவாகிய தொடக்க காலத்தில் கொண்டிருந்த கொள்கை உறுதியிலிருந்து, நிறையவே விலகி வெகுதூரம் சென்றுவிட்டீர்கள்.

வாய்ப்புப் பறிபோனதே!

அரசியல் களத்தில், திருமாவின் இந்த அணுகுமுறையால்தான், விவேகமான நகர்வுகளால்தான் இன்று சட்டப்பேரவையில் 4 சிறுத்தைகளும், பாராளுமன்றத்தில் 2 சிறுத்தைகளும் உருமிக் கொண்டிருக்கின்றன என்று முட்டுக் கொடுப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து திராவிட இயக்கங்களுக்கு அடிமை சாசனம் எழுதிகொடுத்தது போல அரசியல் செய்ததால்தான் திருமா அவர்கள் பல வாய்ப்புகளைப் பறிகொடுத்திருக்கிறார். அதனால்தான் ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவோடு தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியாக விசிக உருவாவதையும், தமிழகத்தின் முதல்வர் நாற்காலிக்கான தலைவர் என்று கனியக் காத்திருந்த வாய்ப்பையும் தவறவிட்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம். கொள்கையில், கோட்பாட்டில் சறுக்கி, செயலில் உண்மையில்லாமலும், பேச்சில் இருக்கின்ற வீரியம், சுயமதிப்பீட்டிலும், தன்னம்பிக்கையிலும் இல்லாமல் தடுமாறுகிறது விசிக.

முதல் சறுக்கலும் முதன்மைச் சான்றும்

விசிகவும், திருமாவும் இப்படி சறுக்கிய இடங்களின் முதன்மைச் சான்றாக, அழியா கறையாக நின்று சாட்சியம் சொல்வதுதான், கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில் திருமாவளவன் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு. இன்று தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க இவ்வளவு மெனக்கிடும் திருமாவளவன், மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பொ. இரத்தினம் மற்றும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா போன்றோர் விசிகவின் மீது அவதூறு என்கின்ற சேற்றை வாரி இறைக்க என்ன அவசியம் வந்தது என்பதை ஆதாரத்தோடு விளக்க முடியுமா?

அவதூறு: புது இலக்கணம் எழுதும் விசிக

“இதெல்லாம் முடிந்துபோன விஷயம். அன்றைய என்னுடைய நிலைப்பாடு வேறு, இன்றைய நிலைப்பாடு வேறு. நான் அன்று நேரில் கேட்டறிந்ததை மனசாட்சியுடன் பதிவு செய்திருக்கிறேன். அதைப் பொய் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மைதான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படும். இதற்காகத்தான் பாஜகவினர் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். எனவே, நான் அந்த மாதிரியான கட்டத்தை நோக்கிப் போகவேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே, திருமாவுக்கே அந்த ஆதாரங்களைத் தனியாக அனுப்பிவைக்கலாம் என்றிருக்கிறேன்", என்று ஆணித்தரமான ஆதாரத்தோடும், பெருந்தன்மையோடும், சமூக நீதியின்பால் அவருக்கிருக்கின்ற அக்கறையோடும் பேசுகிறாரே ஆதவன் தீட்சண்யா, அவரின் குற்றச்சாட்டும் அவதூறா?

மேலவளவில் தொடங்கி, திண்ணியம் மற்றும் சென்னகரம்பட்டி இரட்டைக்கொலை வழக்குகளில் நியாயம் கிடைக்க சமரசமில்லாமல் போராடி, வெற்றியும் பெற்றுவிட்டு, “உலக வரலாற்றிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு அமைப்பைத் தொடங்கிவிட்டு, அவர்களுக்கே துரோகம் செய்கிற அமைப்பு இதுவாகத்தான் இருக்கும்", என்று ஆதங்கத்தில் தொடர்ந்து விசிகவை குற்றம்சாட்டும் வழக்கறிஞர் பொ.இரத்தினம் பட்டியலினத்தவர் அல்ல. அப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் கூற்றையும் அவதூறு என்று சொல்லி தப்பிக்கும் விசிகவின் போக்கு விபரீதமானது.

உண்மை எது தெரியுமா?

நாம் எல்லோரும் ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். வழக்கறிஞர் பொ.இரத்தினம், ஒரு போராளியாக வாழ்க்கையை தொடங்கி, இன்றும் நேர்மையான போராளியாகவே இருக்கிறார். ஆனால், ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’, என்று போராளியாக தனது பொதுவாழ்வை தொடங்கிய திருமாவளவனோ, இன்று திராவிட இயக்கங்களுக்கு ஊன்றுகோல் அரசியல் தலைவராக இருக்கிறார். இவ்விருவரில் யார் உண்மை பேசுவார் என்பதை அரசியல் உலகை நடுநிலையாக நோக்குபவர்கள் அனைவரும் நன்கு அறிவர்.

சாதிய கட்டமைப்பை வலுவாகக் கொண்டிருக்கும் ஒரு பன்மை சமூகத்தில், ‘சாதி ஒழிப்பு’ என்கிற இலக்கை நோக்கிய உங்களது பெரும்பயணத்தில் தவறுகளை திருத்திக்கொண்டு பயணிப்பதில் தவறொன்றுமில்லை சிறுத்தைகளே!

- கட்டுரையாளர்: ஊடகவியலாளர் மற்றும் சமூகநீதி செயல்பாட்டாளர்

SCROLL FOR NEXT