நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் நாஞ்சில் சம்பத்திற்கு என்ன ஆனது?- சுயநினைவின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
அரசியல்

நாஞ்சில் சம்பத்திற்கு என்ன ஆனது?- சுயநினைவின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

காமதேனு

திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக்குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல், இலக்கிய மேடைகளையும் தாண்டி சினிமாவிலும் நடிகராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். அண்மையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா முதன்மைப் பாத்திரம் ஏற்றுநடித்த 'செம்பி' படத்திலும் அரசியல்வாதியாக நடித்திருந்தார். இவரது திருமணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடந்தது. திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கிய போது, அதில் இணைந்து மதிமுகவின் பிரச்சார பீரங்கியாக வலம்வந்தார்.

தொடர்ந்து மதிமுகவில் இருந்து அதிமுக, அதன் பின் அமமுக, பின்பு திமுக மேடைகளில் இப்போது திராவிட இயக்கப் பேச்சாளராக பேசிவருகிறார் நாஞ்சில் சம்பத். இவர் அதிமுகவில் இருந்தபோதும், ஒருமுறை மூளையில் நரம்பு வெடித்து சுயநினைவின்றி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் சேர்ந்தார். இதுகுறித்துத் தெரியவந்ததும் ஜெயலலிதா அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறச் செய்தார்.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத் நேற்று இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். அவரது உறவினர்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நாஞ்சில் சம்பத்திற்கு இதுவரை சுயநினைவு திரும்பவில்லை. இருந்தும் நாஞ்சில் சம்பத் உடலுக்கு என்னப் பிரச்சினை என்பது குறித்து இதுவரை மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT