அரசியல்

`தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் 50 கோடி வரை விலைபோனது'- அனல் கிளப்பிய முன்னாள் ஆளுநர் பன்வாரிலால்

காமதேனு

தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் 40 முதல் 50 கோடி ரூபாய் வரை விலை போனதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்து வரும் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தில் ஆளுநராக 4 வருடங்கள் பணியாற்றியவர். இவர் ஆளுநராக இருந்த போது தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. மேலும் அவருக்கு கறுப்புக் கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் அவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் எழுப்பப்பட்டது. தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்து வரும் பன்வாரிலால் புரோஹித் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “தமிழ்நாட்டில் நான் 4 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றினேன். பஞ்சாபை விடத் தமிழகத்தின் நிலை மிகவும் மோசம். தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தகுதி இல்லாதவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால் நான் தலையிட்டு 27 பல்கலைக்கழக துணை வேந்தர்களை சட்டப்படி நியமித்தேன். என்னிடம் இருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் உள்ளவர்களின் தகுதி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தகுதியானவர்கள் அந்த பதவிகளில் நியமிக்கப்பட்டு, கல்வித் தரம் உயர் வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ஆளுநரை எதிர்த்து அரசியல் செய்த திமுக தரப்பில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை. அதுபோல் அதிமுக காலத்தில் நடைபெற்ற விவகாரங்களைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதால் அதிமுகவும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT