அகிலேஷ் யாதவுடன் தாரா சிங் சவுகான்
அகிலேஷ் யாதவுடன் தாரா சிங் சவுகான் Akhilesh Yadav twitter page
அரசியல்

உபியில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

காமதேனு

உபியில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுர்யா பதவி விலகிய 24 மணி நேரத்தில், மற்றொரு அமைச்சரான தாரா சிங் சவுகான் ராஜினாமா செய்துள்ளது ஆளும் பாஜக அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுர்யா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தோடு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அவர் விலகிய சில மணி நேரங்களில் ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வர்மா, பகவதி பிரசாத் சாகர் ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அகிலேஷ் யாதவ்

அடுத்தடுத்து அமைச்சர் ஒருவர் கட்சியில் இருந்து விலகல், எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா விவகாரம் ஆளும் பாஜக அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைச்சரவையில் இருந்து இன்னொரு அமைச்சர் தாரா சிங் சவுகான் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரும் சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக நீதிக்கான போராட்டத்தின் இடைவிடாத போராளியான தாரா சிங் சவுகானுக்கு மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துகளும். சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டாளிகள் ஒன்றிணைந்து, சமத்துவம் மற்றும் சமத்துவத்தின் இயக்கத்தை தீவிரநிலைக்கு எடுத்துச் செல்வார்கள். பாகுபாடுகளை ஒழிப்போம்! இது எங்கள் கூட்டுத் தீர்மானம்! அனைவருக்கும் மரியாதை. அனைவருக்கும் இடம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT