அரசியல்

`அரைக்கால் சதவீதம் கூட பழனிசாமியுடன் கூட்டணி கிடையாது'- பதிலடி கொடுத்த டி.டி.வி.தினகரன்

காமதேனு

”பழனிசாமியோடு கூட்டணி வைப்போம் என்று நான் சொல்லவில்லை. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் ஒன்று திரளவேண்டும் என்றுதான் சொன்னேன்” என டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “நாங்கள் வேறு கட்சியில் இணைவதற்குச் சாத்தியமே கிடையாது. அமமுக சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். மற்றவர்களுடன் கூட்டணிதான் வைத்து கொள்ள முடியும் என்றுதான் சொன்னேன். அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும், ஓரணியில் திரண்டு திமுகவை எதிர்க்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறேன். மெகா கூட்டணி என்று சொல்கிறவர்கள், திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் சொன்னேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பழனிசாமியின் தொலைக்காட்சி உரையின் வழியாக அவர் அம்மாவின் தொண்டர் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஒரு சதவீதம் அல்ல, அரைக்கால் சதவீதம் கூட பழனிசாமியுடன் கூட்டணி வைப்போம் என்று நான் எங்கும் சொன்னதில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா எனச் செய்தியாளர்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். இன்று அதிமுக செயல்படாத கட்சியாக இருக்கிறது. ஓர் இடைத் தேர்தல் வந்தால், அந்த கட்சியில் வேட்பாளருக்குச் சின்னம் கொடுக்க கூடிய இடத்தில் யார் இருக்கிறார்கள்? இதனால் பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். இன்றைக்கு அந்த கட்சியே தலையில்லாத முண்டமாக இருக்கிறது. செயல்படாத நிலையில் உள்ளது. ஒரே கட்சியில் ஒரே மாவட்டத்திற்கு பழனிசாமி ஒரு மாவட்டச் செயலாளரையும், ஓபிஎஸ் ஒரு மாவட்டச் செயலாளரையும் நியமித்திருக்கிறார்கள். ஒருசிலரின் சுயநலத்தாலும், பதவி வெறியாலும் அவர்கள் பேசுவதெல்லாம் சரியாக இருப்பதில்லை. பழனிசாமி திருந்தி வந்தால் அவரை ஏற்போம்” என்றார்.

SCROLL FOR NEXT