அரசியல்

முதியவர்களை எட்டி உதைத்த எஸ்.ஐ இடமாற்றம்: வைரல் வீடியோவால் நடவடிக்கை

காமதேனு

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பிரியாணி வாங்க சென்ற முதியவர்களை இழுத்து தள்ளி காலால் எட்டி உதைத்த எஸ்.ஐ. கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் வி்ழா தமிழகமெங்கும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை துறைமுகம் தொகுதி கொத்தவால் சாவடியில் அதிமுக மேற்கு பகுதிச்செயலாளர் வெற்றிலை மாரிமுத்து சுமார் 1000 ஏழை எளிய பெண்களுக்கு சேலைகளும், 5 ஆயிரம் பேருக்கு மதிய உணவும் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பாலகங்கா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஓன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உணவு வாங்க முற்பட்ட போது நெரிசல் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொத்தவால் சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், முதியவர்கள் என்று பாராமல் அங்கிருந்தவர்களைத் தரதரவென இழுத்து கீழே தள்ளி விட்டார். அத்துடன் ஒருவரை எட்டி உதைத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ராதா கிருஷ்ணனை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT