குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் மணிமண்டப கட்டுமானப் பணி
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் மணிமண்டப கட்டுமானப் பணி 
அரசியல்

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு சுடுகாட்டில் மணிமண்டபம்!

கே.எஸ்.கிருத்திக்

பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்திவரும் நிலையில், வீரத்தியாகிகளின் மணிமண்டபம் என்ற பெயரில் சுடுகாட்டில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் அவர்களை அவமதிப்பதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றப்பரம்பரைச் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில இன மக்களை குற்றப் பரம்பரையினராக அறிவித்து, கைரேகைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நினைத்தால் எந்தவொரு சாதியையும் 'குற்றப்பரம்பரை' என்று அறிவிக்கலாம். தவறு செய்தால்தான் குற்றவாளிகள் என்பதெல்லாம் கிடையாது. அந்தச் சாதிகளில் பிறந்தவர்கள் எல்லோருமே 'பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம். தமிழ்நாட்டில் இச்சட்டத்தின்படி கள்ளர், மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், வலையர் உள்பட 89 சாதிகள் குற்றப்பரம்பரையாக அறிவிக்கப்பட்டன.

இந்தச் சாதிகளைச் சேர்ந்த 18 வயதை எட்டிய அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். இரவில் ஆண்கள் எல்லாம் போலீஸ் கண்காணிப்பில் ஊர் பொதுமந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதான கிழவர்கள், புதிதாகத் திருமணமான இளைஞர்களுக்குக்கூட இதில் விதிவிலக்கு கிடையாது.

பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சு.வெங்கடேசன் எம்.பி, கலெக்டர் அனீஷ்சேகர்.

நினைவு தினம்

இந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் கடந்த 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி போராட்டம் வெடித்தது. அதை அடக்குவதற்காக ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 பேர் வீரமரணம் அடைந்தனர். இதில் காயமடைந்து கிடந்தவர்களுக்குத் தண்ணீர் கொண்டு சென்ற மாயாக்காள் என்ற பெண்ணும் அடக்கம்.

'தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் படுகொலை' என்று அழைக்கப்படும் இந்தச் சம்பவத்தை பிரமலை கள்ளர் சமூகத்தினர் ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து, வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர். பெருங்காமநல்லூர் தியாகிகள் வீரவணக்க நாளில் அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதன்படி இன்று மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அனீஷ் சேகர் பெருங்காமநல்லூர் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், ஃபார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அஞ்சலி செலுத்தின.

வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம் சார்பில் நடந்த பால்குட ஊர்வலம்.

அவமதிக்காதீர்கள்...

இந்த நினைவிடம் அமைந்துள்ள அதே பெருங்காமநல்லூரில், வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம் சார்பில், பால்குடம் எடுத்து, தேங்காய் பழம் படைத்து நடுகல்லை வழிபட்டார்கள். பிறகு நினைவுத் தூணுக்கும் மரியாதை செலுத்தினர். இதுபற்றி அந்த அமைப்பின் தலைவி செல்வப்பிரீத்தாவிடம் கேட்டபோது, ”எங்களைப் பொருத்தவரையில் எங்கள் அடிமைத் தழையை அறுத்தெறிந்த தெய்வங்கள் அவர்கள். மற்றவர்களுக்கு இது தியாகிகள் நாள் என்றால், எங்களுக்கு இது குல தெய்வ வழிபாட்டு நாள், திருவிழா. எனவே, நேற்றே கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டோம். பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா பங்கேற்ற கருத்தரங்கம் என்று பல நிகழ்வுகளை நடத்தினோம்.

ஆனாலும், எங்களுக்குப் பெரிய மனக்குறை இருக்கிறது. அந்த வீரத்தியாகிகள் மரணமடைந்த போர்க்களமான வயல்வெளியிலோ, அல்லது ஊர் மந்தையிலோ அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தேர்தல் நெருக்கத்தில் மணிமண்டபம் கட்ட அதிமுக அரசு ஆணையிட்டது. ஆனால், நாங்கள் சொன்ன இடத்தில் கட்டாமல், சுடுகாட்டில் கொண்டுபோய் மணிமண்டபத்தைக் கட்டுகிறார்கள். கடந்த 102 ஆண்டுகளாக போர்க்களத்திலும், ஊர் மந்தையிலும்தான் வழிபாடு நடக்கிறது. ஊருக்குள் கட்டினால் அந்த மணிமண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கும் உதவும். அப்படியிருக்கையில் எதற்காக சம்பந்தமே இல்லாத சுடுகாட்டில்கொண்டுபோய் கட்டுகிறீர்கள் என்று அறிவிப்பின் போதே எதிர்ப்பு தெரிவித்தோம். அன்றைய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட யாருமே காதுகொடுக்கவில்லை. ஆள் அரவமற்ற சுடுகாட்டில் வேலை நடப்பதால், பணிகளில் நிறைய முறைகேடு நடக்கிறது. அவ்வளவு பெரிய மணிமண்டபம் கட்ட சுண்டுவிரல் சைஸ் இரும்புக் கம்பியைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிக் கட்டினால், சில ஆண்டுகளிலேயே மணிமண்டபம் சேதமடைந்து, பாழடைந்த சுடுகாட்டுக் கொட்டகை போல மாறிவிடும் என்று ஊர் மக்கள் கரடியாய்க் கத்தியும் யாரும் கேட்கவில்லை. ஆட்சி மாறிய பின்னரும் காட்சி மாறவில்லை. அதே காண்ட்ராக்டர், அதே தரத்தில் வேலையைத் தொடர்கிறார். 1.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிற கட்டிடமா அது என்று பார்க்கிற யாராக இருந்தாலும் முகம் சுழிக்கிற அளவுக்கு பணிகள் மோசமாக நடக்கின்றன. அதே காண்ட்ராக்டர் தனது வீட்டை அவ்வளவு தரமாக கட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால், வீரத் தியாகிகளை மட்டும் அவமதிக்கிறார்கள். உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், இந்தத் தவறுக்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்களே என்பதுதான் வேதனையாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT