அரசியல்

`உதயநிதியைத் திருப்திப்படுத்தவே எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை'

கவிதா குமார்

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக சட்டமன்ற கொறடாவாகவும் உள்ளார். இவர் கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக சொத்துகளைச் சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 2021-ல் ஆகஸ்ட்-10ம் தேதி வேலுமணி வீடு, உறவினர்கள், பினாமிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தனர். நேற்று இரண்டாவது முறையாக சென்னை, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்பட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனை குறித்து அதிமுக மாநில செய்தி தொடர்பாளர் கோவை சத்தியனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கோவை சத்யன்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதை அதிமுக எப்படி பார்க்கிறது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016- ம் ஆண்டு அதிமுகவின் கதை முடிந்தது என்று பலரும் நினைத்தனர். ஆனால், அப்போது, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க எஸ்.பி.வேலுமணி உள்பட ஐவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றது. அதனால் எஸ்.பி.வேலுமணி மீது திமுகவிற்கு தனிப்பட்ட கோபம் உண்டு. இதன் வெளிப்பாடாகத்தான் 'எஸ்.பி. வேலுமணி சிறைக்குச் செல்வது உறுதி' என ஸ்டாலினின் பட்டத்து இளவரசர் உதயநிதி கூட்டங்களில் பேசினார். இதன் தொடர்ச்சியாகத்தான் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், உதயநிதி சொன்னது என்னாவது என இப்போது இரண்டாவது முறையாக சோதனை நடத்துகிறார்கள். திமுகவின் பழிவாங்கும் இந்த நடவடிக்கையைக் கண்டு அதிமுக ஒரு போதும் பயப்படாது. எத்தனை சோதனைகள் வந்தாலும் துவண்டு விடாது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 3,928 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறதே?

நேற்று சோதனை துவங்கியவுடனேயே இந்த புள்ளி விவரக்கணக்கை ஊடகங்களுக்கு எப்படி கசிய விட்டார்கள் ? முன்கூட்டியே திட்டமிட்டு புள்ளி விவரக்கணக்குகளை தயார் செய்து வந்துள்ளனர் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. முதல்முறை நடந்த சோதனையின் போது ஒரு ஆதாரமாவது அவர்களால் திரட்ட முடிந்ததா?. அதன் காரணமாக இரண்டாவது முறையாக சோதனை செய்துள்ளனர்.

ரத்த சம்பந்தமில்லாதவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிடக்கூடாது என்ற சட்டவரைமுறை உள்ளது. ஆனால், அதையெல்லாம் மீறி எஸ்.பி.வேலுமணி துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமின்றி காவல்துறையைச் சேர்ந்த பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நேற்று நடைபெற்றுள்ளது. திமுக அமைச்சரவையில் உள்ள 13 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பலர் வாய்தா வாங்காமல் ஓடுகிறார்கள். ஆனால், எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியிலும் பயமில்லை. எந்த சோதனை வந்தாலும் எதிர்கொள்வோம்.

அதிமுகவைப் பலப்படுத்த சசிகலா,டி.டி.வி.தினகரனை சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுகவில் தீர்மானம் வடிவம் பெற்றுள்ளதே?

அதிமுகவில் தமிழகம் மாவட்டக் கழகங்கள் உள்ளன. எங்கிருந்தாவது இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? ஆதாயம் தேட நினைப்பவர்கள் ஏதாவது இப்படி செய்து கொண்டிருப்பார்கள்.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

சசிகலா முடிந்து போன அத்தியாயம். அவர் மீது பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவற்றில் அவர் தண்டிக்கப்படலாம். எடப்பாடி- ஓபிஎஸ் தலைமையில் அதிமுக பலமாகவே உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியையும் பெறும்.

SCROLL FOR NEXT