அரசியல்

தொழில்துறையில் 3-வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்: மதுரை மாநாட்டில் ஸ்டாலின் பெருமிதம்

காமதேனு

நாட்டில் எளிமையாகத் தொழில் தொடங்க ஏதுவான மாநிலத்தில் 14-வது இடத்திலிருந்து தமிழகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற பெயரில் மதுரையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தெற்கு மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், , “புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள 25 பொருட்களில் 14 வகையான பொருட்கள் தென்தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது பெருமைக்குரிய ஒன்று. இப்பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள காரணத்தால் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவிலே தயாரித்து ஏற்றுமதி செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத்திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ் 81 நிறுவனங்களுக்கு 21 கோடி அளவில் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நாட்டில் எளிமையாகத் தொழில் தொடங்க ஏதுவான மாநிலத்தில் 14-வது இடத்திலிருந்து தமிழகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்குத் தமிழகத்தைப் பொருளாதாரம் உயர்ந்த மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற இலக்கை அடைய ஏற்றுமதி வர்த்தகம் முக்கியமானதாகும். மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கவுள்ளது. இதனால் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT