`சர்க்கார்' படப்பாணியில் ஓட்டுப்போட்டவர்கள்
`சர்க்கார்' படப்பாணியில் ஓட்டுப்போட்டவர்கள் 
அரசியல்

`சர்க்கார்' படப்பாணியில் கெத்தாக ஓட்டுப்போட்ட நபர்கள்!

காமதேனு

பெரியகுளம், மயிலாடுதுறை, நெல்லையில் மூன்று பேர் சர்க்கார் படப்பாணியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், சர்க்கார் படப்பாணியில் கூலித்தொழிலாளிகள் உள்பட 3 பேர் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டி (32). கூலித்தொழிலாளியான இவர், இன்று மதியம் அங்குள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது வேறு நபர் ஓட்டு போட்டு சென்றதால் அதிர்ச்சி அடைந்தார். இதனால், தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்ததால் சர்க்கார் பட பாணியில் மாற்று படிவம் வழங்கப்பட்டு அதில் அவரது முழு விவரங்களும் நிரப்பி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்-.

இதேபோல பெரியகுளத்தை சேர்ந்த ஆரூண் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது ஓட்டை அதே தெருவை சேர்ந்த பிலால் (32) என்பவர் பதிவு செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சியில் கவிஞர் வேதநாயகம் நகராட்சித் தொடக்கப்பள்ளியில் மூன்று வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குச்சாவடி எண் 12எல்-ல் ஈவேரா தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி செல்வி (55) வாக்களிக்க வந்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்மணிக்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது.

நெல்லை 26வது வார்டில் நாகராஜன் என்பவரது வாக்கினை வேறொருவர் செலுத்தியதாக புகார் எழுந்தது. தேர்தல் விதிப்படி படிவம் 22ஐ பூர்த்தி செய்து சேலஞ்ச் வாக்கை நாகராஜன் பதிவு செய்தார். தமிழகத்தில் பல பகுதிகளில் சர்க்கார் படப் பாணியில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT