அரசியல்

குடியிருப்பு இல்லாத இடத்தில் விமான நிலையத்தை அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்

காமதேனு

குடியிருப்பு பகுதியில் விமான நிலையம் அமைவதைத் தவிர்த்து அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் விமான நிலையம் அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடியிருப்புகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை அழித்து அமைக்கப்படும் விமான நிலையம் எங்களுக்குத் தேவையில்லை என அப்பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அரசியல் பிரமுகர்கள் விமான நிலையத்திற்கு எதிராக தங்கள் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பரந்தூர் விமான நிலையம் அமைவது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மேல்மருவத்தூரில் நேற்று இரவு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களுடைய குடியிருப்புகளை அகற்றாமல், விளைநிலங்களை அப்புறப்படுத்தாமல் அரசுக்குச் சொந்தமான தரிசு புறம்போக்கு போன்ற பகுதிகளைக் கையகப்படுத்தி விமான நிலையங்களைக் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன். அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் என்னைச் சந்தித்து இது குறித்துப் பேசினார்கள். அவர்களின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கிறேன்.” என்றார்.

SCROLL FOR NEXT