மாநாட்டில் உரையாற்றிய இரா.முத்தரசன்
மாநாட்டில் உரையாற்றிய இரா.முத்தரசன் 
அரசியல்

ஹிட்லரின் நிலை... பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த முத்தரசன்

கே.எஸ்.கிருத்திக்

``சர்வாதிகாரியாக செயல்பட்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். அவரைப்போல் செயல்படும் நமது பிரதமருக்கு அவரது நிலை ஏற்பட்டால் நம் நாட்டிற்குத்தான் தலைகுனிவு ஏற்படும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மதுரையில் நடந்துகொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு எதிராக பல சட்ட திட்டங்களை கொண்டுவருகிறது. தாங்கள் பெற்ற அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகிறது. மக்களின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. பாஜக தற்போது வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவில்லை. தனித்தனியாக நின்றார்கள். வாக்குகள் பிரிந்ததால்தான் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் கொள்கை ரீதியாக இணைந்து அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்தியதுபோல, தேசிய அளவில் கூட்டணி அமைந்திருந்தால் 4 மாநில தேர்தலில் பாஜக வெற்றிபெற்றிருக்க முடியாது. அவர்களின் வெற்றியால் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டிருக்கிறது.

மக்களின் இன்னல்களை பற்றி கவலைப்படாத அரசாங்கமாக பாஜக அரசு செயல்படுகிறது. சர்வாதிகாரியாக செயல்பட்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். அவரைப்போல் செயல்படும் நமது பிரதமருக்கு அவரது நிலை ஏற்பட்டால் நம் நாட்டிற்குத்தான் தலைகுனிவு ஏற்படும். பாஜகவுக்கு மதச்சார்பற்ற சக்திகள் அணி பலப்படுத்த வேண்டும். நாட்டின் நலன் கருதி தொடர்ந்து இடதுசாரிகள், மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்படவேண்டும். உணர்வுப்பூர்வமாக இணைந்து செயல்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையும் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஒற்றுமை நிலைக்கும், நீடித்திருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT