அரசியல்

`மதுரை சித்திரை திருவிழாவை போலீஸார் சரியாக கையாளவில்லை'

கே.எஸ்.கிருத்திக்

``மதுரை சித்திரை திருவிழாவை போலீஸார் சரியாக கையாளவில்லை'' என மதுரை மாநகர் மாவட்ட பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிறுவன நாளையொட்டி மரம் நடுவிழா நடந்தது. பின்னர் மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மதுரையில் கரோனா காரணமாக 2 ஆண்டுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெற்றது. இதனால் கடந்த காலங்களில் வந்ததை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக மக்கள் விழாவுக்கு வந்தார்கள். ஏதோ குளறுபடி காரணமாக கள்ளழகர் வழக்கமாகச் செல்லும் மண்டகப்படிகளில், 60 மண்டகப்படிகளுக்கு செல்லவில்லை. இதனால் அந்த மண்டகப்படிகளில் அழகரை காண காத்திருந்த மக்கள் வைகை கரையில் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளழகர் திருவிழாவை போலீஸார் சரியாகக் கையாளவில்லை. போதுமான எண்ணிக்கையில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் எடுக்கவில்லை. வைகை ஆற்றுக்குள் இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படி என்பதற்கு பதில், அறநிலையத்துறை அமைச்சர் மண்டகப்படி என்று பெயர் சூட்டி மரபுகள் மீறப்பட்டுள்ளன. மதுரை மேயர் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதே தெரியவில்லை. திமுகவினர் மேயரை எந்த இடத்தில் வைத்துள்ளனர் என்பதும் தெரியவில்லை. மதுரை மேயருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். மதுரையில் முடங்கி கிடக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT